தி.மு.க முதன்மைச் செயலாளரும், நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேருவின் பிறந்தநாளை, திருச்சி உடன்பிறப்புகள் ஒன்றுசேர்ந்து கொண்டாடி அதகளப்படுத்தியிருப்பது தான் திருச்சியின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு மேலாக திருச்சி மாவட்டத்தை தன் கன்ட்ரோலில் வைத்திருக்கும் கே.என்.நேருவுக்கு, அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஆதிக்கம் லேசாக ஆட்டத்தைக் கொடுத்திருக்கிறது. இதனைச் சரிக்கட்டவும், லோக்கல் அரசியலில் தன்னுடைய செல்வாக்கை தக்க வைக்கவும் நேரு தன்னுடைய மகன் அருண் நேருவை அரசியலில் களமிறக்கினார். இதனை ஆமோதித்து அருண் நேருவை திருச்சியின் அடுத்த முகமாக ஏற்றுக்கொள்ளும் வகையில், உடன்பிறப்புகள் ஒன்றுகூடி அருண் நேருவின் பிறந்தநாளை கொண்டாடித் தீர்த்திருக்கின்றனர்.
முழு நேர அரசியலில் களமிறங்கிய பிறகு, அருண் நேரு கொண்டாடும் முதல் பிறந்தநாள் (டிசம்பர் 12) இது. இதுவரை அருண் நேருவின் பிறந்தநாளை பெரிதாக அலட்டிக் கொள்ளாத உடன்பிறப்புகள், இந்த பிறந்தநாளில் அவரை கொண்டாடித் தீர்த்ததோடு, அன்பில் மகேஷ் கோஷ்டிக்கு ஆட்டம் காட்டும் வகையில் கடந்த ஒரு வாரமாகவே திருச்சி முழுக்க பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்ட ஆரம்பித்தனர்.அமைச்சரின் பிரம்மாஸ்திரமே’, `திருச்சியின் இதயத் துடிப்பே’, `எங்களின் எதிர்காலமே’, `திராவிட தொடர்ச்சியே’ என டிஸைன் டிஸைனான வாசகங்களுடன் திருச்சியில் திரும்பிய இடங்களிலெல்லாம் அருண் நேருவின் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்களே தென்பட்டன. பிறந்தநாளான இன்று சென்னையில் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெறச் செல்வதால், நேற்று மாலையே கட்சி நிர்வாகிகளுக்கு அருண் நேரு அழைப்பு விடுத்திருந்தார்.அந்தவகையில், நேற்று மாலை 4 மணி முதலே நிர்வாகிகள் கே.என்.நேருவின் கட்சி அலுவலகத்தில் கூட ஆரம்பித்தனர். அலுவலகம் அமைந்திருக்கும் அந்த தெருவுக்குள்ளேயே நுழைய முடியாத வகையில் சாலை முழுக்க பந்தல் போடப்பட்டிருந்தது. பேண்ட் வாத்தியங்கள் இசை ஒருபுறம், உடன்பிறப்புகளின் கூச்சல் மறுபுறமென அந்த இடமே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. ஒவ்வொரு நிர்வாகியும் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களை அழைத்து வந்து அருண் நேருவுக்கு வாழ்த்து சொல்லி மாலை அணிவிக்க, சாஸ்திரி நகர் 2-வது கிராஸில் உள்ள அந்த கட்சி அலுவலகம் உடன்பிறப்புகளின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. தன்னைச் சந்திக்க வந்திருந்த நிர்வாகிகளை சிரித்த முகத்தோடு வரவேற்ற அருண் நேரு, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். கட்சி அலுவலகத்துக்கு வெளியே வந்திருந்த நிர்வாகிகள் அனைவருக்கும் பஃபே முறையில் சுடச்சுட மட்டன் பிரியாணி, சிக்கன் வறுவல், முட்டை என சுமார் 5 ஆயிரம் பேருக்கு தடபுடலாக விருந்து நடைபெற்றது.