கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இருந்தாலும் திமுக வேட்பாளர் ஜெயந்தி போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்து வெற்றி பெற்றார். விசிக கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுக வெற்றி பெற்றதால் விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தி இருந்தனர். இருந்தாலும் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ஜெயந்தி ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் துறைத் தலைவருக்கு போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுகவை சேர்ந்த ஜெயபிரபா என்பவரை பதவி விலகச் செய்து அந்த இடத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கொடுக்க திமுக தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் துணைத்தலைவர் பதவியில் இருந்து ஜெயபிரபா பதவி விலகினார்
விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட பொ.மல்லாபுரம் பேரூராட்சியில், திமுக கவுன்சிலர் சாந்தி என்பவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தலைவராக பதவி ஏற்றார். இந்த நிலையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அறிக்கைக்கு பிறகும், இவர் ராஜினாமா செய்ய முன்வரவில்லை.
மாவட்ட செயலாளர், மாநில நிர்வாகிகள் பலர் பேச்சுவார்த்தை நடத்தியும் பதவி விலகாத சாந்தி, “தான் பதவி விலக முடியாது என்றும் தன்னை கட்சியை விட்டு வேண்டுமானால் நீக்கிக் கொள்ளுங்கள்” என தெரிவித்து வருகிறார். இதனால் இரு கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.