திமுக கவுன்சிலர் ஒருவர் தேர்தலில் இரு வாக்குச் சாவடிகளில் வாக்களித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பாக நடைபெற்றது. அப்போது, திருச்சி மாநகராட்சி 56-வது வார்டுக்கு உட்பட்ட முத்துலட்சுமி என்பவர், கருமண்டபம் பகுதியிலுள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள 647 வது வாக்குச் சாவடிக்கு தனது வாக்கினை செலுத்த வந்தார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், உங்கள் வாக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதாக கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது திருச்சி மாநகராட்சி 56 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி, திருச்சி கருமண்டபம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள 647ம் எண் வாக்குச்சாவடியில், வரிசை எண் 673 ல் உள்ள முத்துலெட்சுமி என்பவரது வாக்கை, கையெழுத்திட்டு கள்ள ஓட்டு போட்டது தெரிய வந்தது. இதை அடுத்து மற்ற கட்சி வேட்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் வாக்குச்சாவடி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பாலாஜி புகார் தெரிவித்தார். மேலும் இரண்டு வாக்கை பதிவு செய்த திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவியிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் உண்மை நிரூபிக்கும் பட்சத்தில் 56 வது வார்டில் வேட்பாளர் பட்டியலில் இருந்து அவர் நீக்கம் செய்யப்படுவார் என உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வாக்குறுதி அளித்தார். இதனை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி 56வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட கருமண்டபம் ஆர்.எம்.எஸ்.காலனியை சேர்ந்த கவிதா பெருமாள் திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செயதார். அதில், வாக்கு பதிவின் போது திமுக வேட்பாளர் 56வது வார்டுக்குட்பட்ட கருமண்டபம் ஆரம்ப பள்ளி வாக்குச்சாவடி பாகம் 646 மற்றும் 647 ஆகிய இரண்டு வாக்குச்சாவடிகளிலும் கள்ள ஓட்டுகள் போட்டதோடு மட்டுமல்லாமல் 56வது வார்டுக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அவரது ஆதரவாளர்களால் கள்ள ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டு மஞ்சுளா தேவி வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
நான் இரண்டாம் இடம் பிடித்துள்ளேன். மஞ்சுளா தேவி கள்ள ஓட்டு போட்டதால் அவர் வகிக்கும் கவுன்சிலர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரியும், அவருடைய வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரியும், இரண்டாம் இடம் பிடித்துள்ள என்னை வெற்றி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு விரைவில் விசாரணைக்கு வருகிறது. இதனையெடுத்து இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி திமுக கவுன்சிலர் மஞ்சுளா தேவி, திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர், மாநில தேர்தல் ஆணையர் ஆகியோர், வரும் ஜூன் 10 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.