டிவிஎஸ் டோல்கேட்டில் ஆக்கிரமிப்பில் இருந்த 100க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றம்.
வியாபாரிகள் மறியல்.
திருச்சி மார்ச் 5- திருச்சி சுப்பிரமணியபுரம் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விரிவாக்கம் செய்யப்பட்டு அங்கிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு இருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் சிறிய வாகனங்கள் சென்று வர சாலை அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த சாலையை தரைக்கடைகள் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து பழக்கடை, கறிக்கடை, காய்கறி கடைகள் அமைத்து செயல்பட்டு வந்தனர்.இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடர்பாக பொதுமக்கள் நெடுஞ்சாலை துறை மற்றும் திருச்சி மாநகராட்சியிடம் புகார் தெரிவித்திருந்தனர்.இதையடுத்து இன்று திருச்சி டி வி எஸ் டோல்கேட் ஹனிபா காலனியில் இருந்து ஜெயில் கார்னர் வரை சர்வீஸ் ரோடு சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை நெடுஞ்சாலை துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள்.
வியாபாரிகள் மறியல்:
ஊழியர்கள் பொக்லின் இயந்திரம் கொண்டு ஆக்கிரப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.சிறிது நேரத்தில் வியாபாரிகள் அனைவரும் ஒன்று கூடி டோல்கேட் பகுதியில் திடீரென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து கேகே நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். மேலும் அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறாமல் இருக்க அங்கு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.