திருச்சி அரசியல்வாதிகளிடமிருந்து காவல் நிலையத்தை காப்பாற்ற வேண்டிய நிலை!!!!
அன்று திருச்சி நீதிமன்ற காவல் நிலையம்!!!!இன்று திருச்சி மகளிர் காவல் நிலையம்!!!!
திருச்சியில் இளைஞர் காங்கிரஸ்
கட்சியினர் இரவு சாலை மறியல்
போலீசார் தாக்கியதாக கூறி
திருச்சியில் போலீசார் தாக்குதல் நடத்தியதாக கூறி, இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் வியாழக்கிழமை இரவு சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டனர்.
திருச்சி கண்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்தவர் மெர்லின் (25). உறவினர் சாமுவேல் சாந்தகுமார் (35). இருவரும் பல்மருத்துவர்கள் என்பதையடுத்து தொடர்ந்து நேரிலும், கைப்பேசியிலும் பேசி பழகி வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாமுவேலுக்கு திருமணம் ஆனது. இதையடுத்து மெர்லின், சாமுவேலுடன் பேசுவதை தவிர்த்துள்ளார். இதை தாங்கமுடியாத சாமுவேல், ஏற்கெனவே எடுத்திருந்த மெர்லின் படங்களை அனுப்பிவைத்து தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 3–ஆம் தேதி மெர்லின், கண்டோன்மென்ட் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த வழக்கில் சாமுவேலை போலீசார் வியாழக்கிழமை மாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர். அப்போது சாமுவேலுக்கு ஆதரவாக சென்னை, அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த, இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நரேஷ் என்பவர் கண்டோன்மென்ட் காவல் நிலையம் வந்து, நாங்கள் சாமுவேலை நீதிமன்றத்தில் சரண் அடைய வைக்கிறோம் என்று கூறினாராம். அப்போது போலீசாருக்கும் நரேஷ்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நரேஷ் திருச்சி இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் விச்சு என்பரை கைப்பேசியில் அழைத்துள்ளார். உடனே சம்பவ இடத்துக்கு விச்சு மற்றும் அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்தனர். காவல் நிலையத்தில் கூட்டம் திரள்வதை கண்ட கண்டோன்மென்ட் மகளிர் போலீசார் “”ஓப்பன் மைக்கில்” காவல் நிலைய பாதுகாப்புக்கு, போலீசாரை அனுப்பிவைக்குமாறு கூறியுள்ளனர்.இதனையடுத்து கண்டோன்மென்ட் காவல் உதவி ஆணையர் கென்னடி தலைமையிலான போலீசார் காவல் நிலையத்துக்கு இரவு வந்தனர். அப்போது காவல் நிலைய வாயிலில் நின்றிருந்த விச்சுவுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு லேசான கைகலப்பாக மாறி மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து உடனே காங்கிரஸ் கட்சியினர் போலீசாரைக் கண்டித்து கண்டோன்மென்ட் மகளிர் காவல் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆதரவாக மேலும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து காவல் நிலையத்துக்கு வந்த வண்ணம் இருந்தனர். இதைத்தொடர்ந்து மாநகர காவல் துணை ஆணையர் ஸ்ரீதேவி தலைமையிலான போலீசார் காங்கிரஸ் கட்சியினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் இரவு பரபரப்பு ஏற்பட்டது.