திருச்சியில் இயங்கும் பெரும்பாலான பெண்கள் கல்லூரியில் உள்ள மாணவிகளுக்கான விடுதிகள் முறையாக திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் சட்டம் 2014-ன் படி ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள அனைத்து மகளிர் விடுதிகளும் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று செயல்பட வேண்டுமென தமிழ்நாடு அரசாணை எண் G. O. (Ms) No. 10 dated on 21-02-2015 படி வழிகாட்டு நெறிமுறைகளும் மற்றும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளும் தெளிவாக வழங்கியுள்ளனர்.
மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமலும் சட்ட விரோதமாக செயல்படும் மகளிர் விடுதிகள் 31-01-2019 தேதிக்குள் உரிய வகையில் மனு செய்து உரிமம் பெற வேண்டுமென்று திருச்சி மாவட்ட முன்னாள் ஆட்சியர் இராசமாணிக்கம் அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் மேற்கண்ட உத்திரவை துளியும் மதிக்காமலும் சட்ட விரோதமாக திருச்சியின் மையப் பகுதிகளில் பல மகளிர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மகளிர் விடுதிகள் பலவும் அனுமதி பெறாமல் இயங்குவது தொடர்பாக மாவட்ட சமூக நல அலுவலருக்கு தொடர்ந்து பொது மக்களிடமிருந்து புகார்கள் வந்த நிலையில் கடந்த 03-08-2023 -ம் தேதியன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் மற்றும் மண்ணச்சநல்லூர் ஆகிய நான்கு வட்டங்களுக்கு கட்டுப்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி செயல்படும் அனைத்து பள்ளி, கல்லூரி நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் செயல்படும் விடுதிகள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதிகளை முறையாக ஆய்வு செய்து அதன் முழு விவரங்களை 11.08.2023-க்குள் அனுப்ப வேண்டும் என்ற உத்தரவிட்டுள்ளார்..
மேற்படி உத்தரவுப்படி இது நாள் வரை நான்கு வட்டாட்சியர்களும் மகளிர் விடுதிகள் சம்பந்தமாக ஆய்வு செய்யாமல் மெத்தனமாக செயல்பட்டு வருகின்றனர்.