சென்னை: அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு திமுக அரசு கொடுத்துள்ள நிதியும், விருதும் தான் இப்போது பேசு பொருளாக உள்ளது.
குமரி மாவட்ட எல்லை மீட்பு போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகள் பட்டியலில் தமிழ்மகன் உசேனின் பெயரும் இருப்பதால் அவருக்கு அண்மையில் தமிழக அரசு ரூ.1 லட்சம் நிதியும், விருதும் அறிவித்தது.
இதை முதலமைச்சர் கைகளால் பெற விரும்பாத தமிழ்மகன் உசேன், தமிழ்வளர்ச்சித்துறை அதிகாரிகள் மூலம் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைய போராடிய தியாகிகளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் தமிழக அரசு சார்பில் அண்மையில் ரூ. 1 லட்சம் நிதியும், விருதும் அளித்து கவுரவிக்கப்பட்டது. எல்லை போராட்டத்தில் பங்குபெற்று தற்போது உயிருடன் இருக்கும் 110 பேர்களில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனும் ஒருவர். இதனால் அரசியல் வேறுபாடுகளை கடந்து எல்லை போராட்ட தியாகி என்ற வகையில் அவருக்கு சிறப்பு செய்திருக்கிறது தமிழக அரசு.சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், குமரி மாவட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜூம் இந்த விருதை உரியவர்களுக்கு வழங்கினர். இந்நிலையில் திமுகவினர் கைகளால் அந்த விருதை பெறமாட்டேன் என பிடிவாதம் பிடித்த தமிழ் மகன் உசேன் அதை பெறுவதற்கு செல்லவே இல்லையாம். இந்நிலையில் விருதை திமுக கொடுப்பதாக கருதவேண்டாம், தமிழக அரசு கொடுப்பதாக கருதுங்கள் என அவரிடம் குடும்ப உறவுகள் கேட்டுக்கொண்டதால் தமிழ்வளர்ச்சித்துறை அதிகாரிகள் மூலம் பெற்றுக்கொண்டாராம்.இதனிடையே அதற்குள் அதிமுக அவைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுவிட்டதால் இந்த விருது குறித்து வாழ்த்துச்சொல்ல அழைப்பவர்களிடம் கூட அது தொடர்பாக பேச விரும்புவதில்லையாம். அதிமுக தலைமை இந்த விவகாரத்தை எப்படி எடுத்துக்கொள்ளுமோ என்ற அச்சமும், ஐயமும் அவரிடம் நிறைய உள்ளதாக தெரிவிக்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.