சனிபகவான் ஆலயத்தில் பக்தர்கள் பரிகாரத்திற்காக விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்கள் கெட்டுப்போய் இருந்தது உணவுப்பாதுகாப்புத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. தரமற்ற உணவுப்பொருட்களை பறிமுதல் செய்து அழித்துள்ளனர்.
உலகப்புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் பரிகார தலமாக திகழ்கிறது. சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் திருநள்ளாறுக்கு வந்து பரிகாரம் செய்து செல்வார்கள். நளன் குளத்தில் குளித்து விட்டு பலருக்கும் அன்னதானமாக உணவு வாங்கிக் கொடுப்பது வழக்கம்.கோயிலுக்கு வரும் பக்தர்கள் பரிகாரமாக செய்வதற்கு விற்பனை செய்யப்படும் உணவுகள் தரமற்றதாக இருப்பதாகவும் கெட்டுப்போனதாக இருப்பதாகவும் வந்த புகாரையடுத்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
காரைக்கால் அடுத்த உலக புகழ் பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகிறார்கள். இந்த நிலையில் வரும் பக்தர்கள் நளன் குளத்தில் நீராடி விட்டு பரிகாரமாக செய்வதற்கு விற்கப்படும் உணவுகள் கெட்டுப்போயுள்ளதாக உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு வந்த புகாரையடுத்து நளன்குளத்தை சுற்றி உணவு விற்பனை செய்யும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பொழுது நளன் குளத்தை சுற்றி உள்ள தெரு ஓரத்தில் விற்கப்படும் பரிகார உணவு பொருட்கள் கெட்டுப் போனது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கெட்டுப்போன பரிகாரம் உணவு பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் நளன் குளத்திற்கு அருகில் விற்பனை செய்யப்படும் பரிகார உணவுப்பொருட்களை வாங்கி பிச்சை எடுப்பவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். ஆனால் பக்தர்கள் அவ்வாறு வழங்கப்படும் இந்த பரிகார உணவுப் பொருட்களை மீண்டும் கடையில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். அந்த பொருட்களை மீண்டும் வாங்கி கொண்டு போய் தானமாக கொடுப்பது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சோதனையில் தெரியவந்தது.
இதனையடுத்து உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பிச்சை எடுப்பவர்களிடம் இருந்து கெட்டுப்போன அனைத்து உணவு பொருட்களையும் பறிமுதல் செய்தனர். பக்தர்களுக்கு கெட்டுப்போன உணவு பொருட்களை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்யும் சனி பகவான் கோவில் குளத்தில் கெட்டுப்போன பரிகார உணவு விற்பனை செய்த சம்பவம் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கெட்டுப்போன உணவுப்பொருட்களை விற்பனை செய்வதும் தோஷம் அதை வாங்கி தானமாக கொடுப்பதும் தோஷம் என்று ஜோதிடர்கள் தெரிவித்தனர்.