தி மு க ஆட்சிக்கு எதிர்ப்பை தெரிவிக்கவும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கவும் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் பா ஜ க வேட்பாளர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் எனக்கூறி திருச்சியில் வாக்குகள் சேகரித்தார் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு 3 தினங்களே உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் பா ஜ க சார்பில், அக்கட்சியின் தேசியச் செயற்குழு உறுப்பினர் எச். ராஜா, திருச்சியில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பா ஜ க வேட்பாளர்களை ஆதரித்து செவ்வாய்க்கிழமை வாக்குகள் சேகரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
திருச்சியில் எடமலைபட்டி புதூர், மேல கல்கண்டார்கோட்டை, அரியமங்கலம், திருச்சி பெரியகடை வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்ட அவர் பிரசாரத்தில் மேலும் பேசியது…
தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் தி மு க ஆட்சியின் நோக்கம் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் மட்டுமே. வேறு எதிலும் அவர்களுக்கு நாட்டமில்லை. நடைபெற்றுவரும் திட்டங்கள் அனைத்துமே மத்தி அரசின் திட்டம். பொலிவுறு நகரத் (ஸ்மார்ட் சிட்டி) திட்டம், வீடு கட்டும் திட்டம், எரிவாயு இணைப்புத் திட்டம், கழிவறைகள் கட்டும் திட்டம், குடிநீர் விநியோகிக்கும் திட்டம் என அனைத்து திட்டங்களும் பாரதப் பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டங்கள்.
130 கோடி மக்கள் தொகை கொண்டுள்ள நாட்டில் இதுவரையில் 180 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதாவது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இரு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவிட்டன. இத்திட்டங்களை செயல்படுத்தி வரும் பிரமருக்கு நன்றி செலுத்தும் வகையிலும், பொய்யான வாக்குறுதிகளை கொடுத்துள்ள தி மு க ஆட்சிக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தாமரை சின்னத்தில் வாக்களித்து, பா ஜ க வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். கரோனா தொற்று காலத்தில் நாட்டில் 50 சதவிகிதம் பேர் வேலைக்குச் செல்ல முடியவில்லை. அந்த நிலையிலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு என வழங்கி, பட்டினிச்சாவு இல்லாத நிலையை ஏற்படுத்தியது மத்திய அரசு . தமிழகத்தில் இவர்கள் எதையும் செய்யவில்லை. நடைபெற்று வரும் ஊழல் அரசை விடுவிக்க வேண்டும் என்றார்.
நிகழ்வுகளில் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜசேகரன் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.