Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

கோவில் நிலங்கள் விற்பனை என்ன நடக்கிறது திருச்சியில்

0

*நில அளவை கோட்ட ஆய்வாளர் ராஜ்குமாருடன் கூட்டுச் சேர்ந்து திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி அவர்களின் அதிகாரத்தை தன் கையில் எடுத்து பல லட்சங்களை சுருட்டிய மண்டல துணை வட்டாட்சியர் பிரேம்குமார் & டவுன் சர்வேயர் பரிமளா..!!*

*இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பல மாதங்களாக கிடப்பில் இருக்கும் புகார் மனு மீது நடவடிக்கை எடுப்பாரா….?*

*கோட்ட ஆய்வாளர் ராஜ்குமார் மீது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு அனுமதி வழங்கிய மாவட்ட நிர்வாகம்…!!*

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற டவுன் ரீ-சர்வே பணியின் போது நிலத்தின் உரிமையாளர்கள் சிலருக்கு பட்டாவில் பெயர்கள் தவறாக பதிவாகியுள்ளது.

இது போன்ற திருச்சி மேற்கு வட்டத்தில் U.D.R. பட்டா பெயரில் தவறை திருத்தம் செய்வதற்கு *மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ள நிலையில்*
நில அளவை கோட்ட ஆய்வாளர் ராஜ்குமாரின் பணத்தாசை வார்த்தையை நம்பி பட்டாவில் (S.L.R.) உள்ள பெயருக்கும், பத்திரப் பதிவு ஆவணத்தில் உள்ள பெயருக்கும் துளியும் தொடர்பு இல்லாத இடங்களுக்கு பல பட்டா பெயர் மாற்றம் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக திருச்சி மேற்கு வட்டத்தில் பணிபுரியும் பெயர் வெளியிட விரும்பாத அலுவலரிடம் விசாரித்த போது
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பட்டா பெயர் மாற்றம் தொடர்பான மனுக்கள் அனைத்தும் கிராம நிர்வாக அதிகாரி வாயிலாக மண்டல துணை வட்டாட்சியர் அவர்களால் ஒப்புதல் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நில அளவை நகர ஆய்வாளர் வாயிலாக மண்டல துணை வட்டாட்சியர் அவர்களால் பட்டா பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

தற்போது வழங்கப்படும் பட்டா பெயர் மாற்ற உத்தரவுகள் அனைத்தும் கணினியில் உள்ள நகர நில அளவை பதிவேட்டில் உள்ள பெயருக்கும் பதிவு ஆவணத்தில் உள்ள பெயருக்கும் நேரடி தொடர்பு இருந்தால் மட்டுமே பட்டா வழங்க இயலும் என்ற விதி இருந்தும், நில அளவை கோட்ட ஆய்வாளர் ராஜ்குமார் அவர்களோடு கூட்டுச் சேர்ந்து டவுன் சர்வேயர் திருமதி. பரிமளா மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் திரு பிரேம்குமார் ஆகியோர் பல லட்சங்களை வாங்கிக் கொண்டு கிராமப் பதிவேட்டில் மற்றும் நகர நில அளவை பதிவேட்டில் உள்ள பெயருக்கும் துளியும் தொடர்பு இல்லாத பத்திரப் பதிவு ஆவணங்களின் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் திருச்சி மேற்கு வட்டம், பிராட்டியூர் கிழக்கு கிராமத்திற்கு உட்பட்ட மதுரை மெயின் ரோட்டில் உள்ள பல கோடி மதிப்புள்ள ஒரு புல எண்ணில் பல ஏக்கர் பரப்பளவும் இடத்திற்கு *நீதிமன்ற வழக்கும் மற்றும் மாவட்ட வருவாய் என அலுவலரிடம் U.D.R. மேல்முறையீட்டு திருத்தம் மனு விசாரணை நிலுவையில் உள்ள* இடத்திற்கு நில அளவை கோட்ட ஆய்வாளர் ராஜ்குமாரிடம் பல லட்சங்களை வாங்கிக் கொண்ட டவுன் சர்வேயர் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் ஆகியோர் கடந்த *31-10-2023 மற்றும் 01-11-2023* ஆகிய இரு தேதிகளில் *கிராம அ பதிவேட்டிலும் நகர நில அளவை பதிவேட்டிலும் உள்ள பெயருக்கும் துளியும் தொடர்பு இல்லாத* மூன்றாம் நபர் ஒருவருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

அதோடு மட்டுமல்லாது திருச்சியின் பெயரைச் சொன்னாலே நினைவுக்கு வரும் *மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலுக்கு* சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்தில் போலி ஆவணம் பதிவு செய்யப்பட்டதாகவும் அதனை ரத்து செய்ய இந்து சமய அறநிலைத் துறை உதவி ஆணையர் அவர்களால் கடந்த 17-10-2022-ம் தேதியன்று ஆணை வழங்கப்பட்டு மற்றும் போலி ஆவணம் தயாரித்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க காவல்துறையில் புகார் கொடுத்து விசாரணையில் உள்ள நிலையில் திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள மேற்படி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும் வருவாய்துறை ஆவணங்களில் *திருச்சி, மலைக்கோட்டை, தாயுமானசுவாமி தற்கால நம்பகர்கள்* என்ற பெயரில் உள்ள சொத்திற்கு தனி நபர்கள் பலர் பட்டா பெயர் மாற்றம் செய்து தர வேண்டி *கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக கோ-அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலரிடமும் & திருச்சி மேற்கு வட்டாட்சியரிடமும் தாக்கல் செய்த பட்டா பெயர் மாற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்ட வந்த வேலையில்* தற்போது *தாயுமானசுவாமி தற்கால நம்பகர்கள்* என கிராம ‘அ’ பதிவேட்டிலும் மற்றும் நகர நில அளவை பதிவேட்டிலும் ஆவண பதிவுகள் உள்ள நிலையில் *”கஞ்சமலை முதலியார் குடும்ப டிரஸ்டு”* க்கு சொந்தமான சொத்துகள் என பத்திரப் பதிவு ஆவணங்கள் பதிவாகி உள்ளது.

மேற்படி சர்வே எண்களில் உள்ள நிலங்களுக்கு கஞ்சமலை முதலியார் டிரஸ்டு என்ற பெயருக்கும் தாயுமானசுவாமி தற்கால நம்பகர்கள் என்ற பெயருக்கும் தொடர்பு ஆவணங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் தான் இதுநாள் வரை பட்டா பெயர் மாற்றம் செய்யாமல் இருந்து வந்து சூழ்நிலையில் கோட்ட ஆய்வாளர் ராஜ்குமாருடன் கூட்டுச் சேர்ந்து கோயில் நிலத்திலும் பட்டா மாறுதல் செய்ய பல லட்சங்களை வாங்கிக் கொண்டு சட்டத்திற்கு புறம்பாக முறைகேடான வழியில் பட்டா பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

இந்நேர்வில் நகரளவை வார்டு: AB, பிளாக்:20, நகரளவை எண்: 1 முதல் 120 முடிய உள்ள நகரளவை எண்களில் கடந்த ஆறு மாதங்களுக்குரிய பட்டா பெயர் மாற்ற புள்ளி விவர அறிக்கையினை ஆய்வு செய்தாலே *பல லட்சங்களை கொடுத்தவர்களுக்கு பட்டா பெயர் மாற்றமும், அதுவே பணம் கொடுக்காதவர்களுக்கு கோயில் நிலம் என சான்று அளித்து மனுவினை நிராகரித்து உள்ளனர்.*

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் தாயுமானவர் கோயில் நிலத்திற்கு தனி நபர் பெயரில் பட்டா வழங்க கூடாது என கடந்த *20-03-2023* தேதியன்று நமது *T நியூஸ்* செய்தி வாயிலாக டவுன் சர்வேயர் திருமதி. பரிமளா அவர்களுக்கும் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அனைவருக்கும் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் வழங்கிய ஆணை & மற்ற ஆதார ஆவணங்களுடன் *whatsapp* குறுஞ்செய்தி அனுப்பிய பின்பு தான்
பல லட்சங்களை வாங்கிக் கொண்ட டவுன் சர்வேயர் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் கூட்டாக சேர்ந்து கோயில் நிலத்திற்கு பல பட்டா பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

மேற்படி மலைக்கோட்டை கோவில் நிலத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்தும் தவறு செய்த அதிகாரி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலைத்துறை சார்பில் மாவட்ட வருவாய் அலுவலகரிடமும் மற்றும் மாவட்ட ஆட்சியரிடமும் புகார் கொடுத்து ஓரு வருடத்திற்கு மேலாகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் இருந்து வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்…

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்