Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

கோவில் நிலத்தில் முறைகேடாக பட்டா வழங்கிய விவகாரத்தில் விசாரணை முடித்தும் பத்து மாதங்களாக திருச்சி கோட்டாட்சியர் அருள் ஆணை பிறப்பிக்காத மர்மம் என்ன…?

0

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக நகரளவை பதிவேட்டில் உள்ள பெயருக்கும் பத்திரப் பதிவு ஆவணத்தில் உள்ள பெயருக்கும் நேரடி தொடர்பு ஆவணங்கள் இருந்தால் மட்டுமே பட்டா பெயர் மாறுதல் செய்ய இயலும் என்ற வருவாய்த்துறை நிலையானை விதி இருந்து வருகின்றது.

திருச்சி நகரப் பகுதிகளில் கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற டவுன் ரீ-சர்வேயின் போது நிலத்தின் உரிமையாளர் பெயர் நகரளவை பதிவேட்டில் தவறாக பதிவாகி இருந்தால் அதனை திருத்தம் செய்வதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ள நிலையில் கடந்த 2019 ஆண்டு ஏப்ரல் மாதம் முன்பு வரை பட்டா பெயர் மாற்றம் தொடர்பான மனுக்கள் அனைத்தும் கிராம நிர்வாக அதிகாரி வாயிலாக மண்டல துணை வட்டாட்சியர் அவர்களால் ஒப்புதல் வழங்கப்பட்டு வந்த நிலையில், 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பின் நில அளவை நகர சார் ஆய்வாளர் வாயிலாக மண்டல துணை வட்டாட்சியர் அவர்களால் பட்டா பெயர் மாற்றம் செய்யப்படுகின்ற சூழ்நிலையில்
நகரளவை பதிவேட்டில் (Survey Land Record) உள்ள பெயருக்கும், பத்திரப்பதிவு ஆவணத்தில் உள்ள பெயருக்கும் தொடர்பு ஆவணங்கள் இல்லாத பல இடங்களுக்கு திருச்சி மேற்கு வட்ட டவுன் சர்வேயர் திருமதி.பரிமளா மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் திரு.பிரேம்குமார் ஆகியோர் கூட்டாக சேர்ந்து பட்டா பெயர் மாறுதல் செய்துள்ளனர். என்று கூறப்படுகிறது

அதில் திருச்சி மாவட்டம், திருச்சி மேற்கு வட்டம், பொன்மலை கோட்டம்,

1). வார்டு: AB, பிளாக்: 20,
நகரளவை எண்: 65 மற்றும் 68 -க்கான நகரளவை பதிவேட்டில் திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சுவாமிகள் தற்கால நம்பகர் என்ற பெயரில் உள்ள நிலையில் கடந்த 23-05-2023 தேதியன்று பட்டா பெயர் மாற்ற உத்தரவு எண் 2023/0153/15/008033 படி ஜான் பாட்ஷா மகன் சாகுல் ஹமீது மற்றும் சாகுல் ஹமீது மனைவி பெனாசிர் பேகம் ஆகிய இருவரின் பெயரை கூட்டாகவும்,

2). வார்டு: AB, பிளாக்: 20,
நகரளவை எண்:120 -க்கான நகரளவை பதிவேட்டில் திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சுவாமிகள் தற்கால நம்பகர் என்ற பெயரில் உள்ள நிலையில் கடந்த 07-07-2023 தேதியன்று பட்டா பெயர் மாற்ற உத்தரவு எண்
2023/0153/15/009942-படி நாராயணசுவாமி மகன் ராகவன் மற்றும் தங்கராஜ் மகன் ரமேஷ்குமார் ஆகிய இருவரின் பெயரை கூட்டாக சேர்ந்து பட்டா மாறுதல் உத்தரவு வழங்கியுள்ளனர்.

ஆனால் மேற்படி சர்வே எண்களில் திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சுவாமிகள் தற்கால நம்பகர் என கிராம ‘அ’ பதிவேட்டிலும் மற்றும் நகர நில அளவை பதிவேட்டிலும் பதிவுகள் உள்ள நிலையில் “கஞ்சமலை முதலியார் குடும்ப டிரஸ்ட்க்கு” சொந்தமான சொத்து என பத்திரப்பதிவு ஆவணங்கள் பதிவாகி உள்ளது.

மேற்படி கோவிலுக்கு சொந்தமான சர்வே எண்ணில் முறைகேடாக பட்டா பெயர் மாற்றம் செய்ததை ரத்து செய்யக் கோரி திருச்சி வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டு கோட்டாட்சியர் அலுவலக கோப்பு எண்.அ5/4183/2023-ன் படி வருவாய் கோட்டாட்சியர் அவர்களால் கடந்த 18.12.2023, 05.01.2024, 19.01.2024 மற்றும் 26.02.2024 ஆகிய நான்கு தேதிகளில் விசாரணை நடைபெற்று அதில் எதிர்மனுதாரர் நான்கு விசாரணைக்கும் ஆஜராகவில்லை என்றும் மற்றும் எதிர்மனுதாரர் ஆஜராகாத நிலையில் ஒரு தலை பட்சமாக முடிவெடுக்கப்பட்டு பட்டா மாறுதல் உத்திரவினை ரத்து செய்ய ஆணை பிறப்பித்து நகர பதிவேடுகளில் உரிய பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்து கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு குறிப்பாணை வழங்கியிருந்த நிலையில் இதுவரை எந்தவித ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை.

இவ்விசாரணையில் சம்பந்தபட்ட எதிர்மனுதாரர் கைவசம் சரியான ஆவணங்கள் இல்லாததால் இந்த நான்கு விசாரணைக்கும் ஆஜராகாமல் காலம் கடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் எதிர்மனுதாரர் ஆஜராகாத நிலையில் ஒரு தலைபட்சமாக முடிவெடுக்கப்பட்டு பட்டா மாறுதல் உத்திரவினை ரத்து செய்ய ஆணை பிறப்பித்து நகர பதிவேடுகளில் உரிய பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மனுதாரருக்கு குறிப்பாணை வழங்கியிருந்த நிலையில் கடந்த பத்து மாதங்களாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது ஏன் என சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக இதுவரை உரிய ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை.
கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு வருவாய் கோட்டாட்சியரால் நான்கு முறை விசாரணை செய்யப்பட்டும் நிலுவையில் உள்ள கோப்பிற்கு (அ5/4183/2023) உரிய உத்தரவு பிறப்பிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்