தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் மத்திய அரசின் திட்டங்களை பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இதில், பல்வேறு அறிவிப்புகள் வெளியிடபட்டன. இதில் அரசு பள்ளியில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்பதும் மிக முக்கியமான அறிவிப்பு. தமிழக அரசின் இந்த அறிவிப்பு கிராமப்புறங்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவிகள், உயர் கல்விக்காக கல்லூரிகளுக்கு செல்வதை ஊக்கப்படுத்தக் கூடியதாக அமையும். இதனால் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தொலை நோக்கு திட்டம் எதுவும் இல்லாத ‘பகல் கனவு பட்ஜெட்டாக’ அமைந்திருக்கிறது என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் மத்திய அரசின் திட்டங்களை பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளது. திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை ‘இன்றும்’ நிறைவேற்றவில்லை. தொலை நோக்கு திட்டம் எதுவும் இல்லாத ‘பகல் கனவு பட்ஜெட்டாக’ அமைந்திருக்கிறது.
6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்வி பயிலும் போது ரூ. 1000 வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். ஆனால் இது ‘பழைய ஆயிரம் ரூபாய் வாக்குறுதி போல் இல்லாமல்’ செயல்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.