காரைக்குடியில் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மத்தியில் மோடி – மாநிலத்தில் யோகி ஆகியோருடைய ஆட்சி வேண்டும் என்று உத்தரப் பிரதேச மக்கள் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். உத்தரபிரதேசம், உத்தரகாண்டில் 35 ஆண்டுகளாக இரண்டாவது முறையாக எந்தக் கட்சியும் ஆட்சியைப் பிடித்தது இல்லை. அந்த வரலாற்றை மாற்றி பாஜக ஆட்சியைக் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. ஜாதி, மத அரசியலை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. முத்தலாக் சட்டம் கொண்டு வரப்பட்டதால் இஸ்லாமியப் பெண்கள் அதிக அளவில் பாஜகவுக்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள்.
உத்தரபிரதேசத்தில் சமூக நீதியை வழங்கியது பாஜகதான். பாஜகவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பதை 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இத்தேர்தல் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்கள். நேரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை தூக்கி எறிந்தால்தான் காங்கிரஸ் கட்சிக்கு இனி எதிர்காலமே உண்டு. வரும் 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோடி மீண்டும் பிரதமர் என்பதற்கு தற்போதைய தேர்தல் முடிவுகளே சாட்சியாக அமைந்துள்ளன. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அரசியல் கட்சிகள் மத்தியில் கருத்து ஒற்றுமை ஏற்பட வேண்டும். அதன் பிறகே ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்.
பிரதர் மோடிக்கு எதிராகப் பேசுவது மக்களிடம் எடுபடாது. தேர்தல் முடிவுகள் அதைத்தான் காட்டுகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒற்றுமை இல்லை. அதுதான் உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றிக்கு காரணம் ஆகும். லவ் ஜிஹாத் தமிழகத்தில் நடக்கிறது என்பதற்கு மேலூர் சம்பவம் ஓர் உதாரணம். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் மாணவி பலியாகி இருக்கிறார். இது மிகுந்த வேதனை அளிக்கிறது. மத்திய அரசின் வலிமை மிக்க தலைமையைக் கொச்சைபடுத்துபவர்கள் தேச விரோதிகள் ஆவர். நாட்டை காட்டி கொடுக்கும் தீய நோக்கம் கொண்டவர்கள்தான் மத்திய அரசை பற்றி பாரபட்சமான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்க:” என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.