Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

மாநகராட்சியின் குடிதண்ணீரை பற்றி ஐயம் தெரிவித்தால், மக்களின் தொன்மையான பழக்க வழக்கங்கள் மீதே பழி போடுவதா?

0

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, மண்டலம்-5, வார்டு எண்-08, பனிக்கன் தெரு உறையூர் மற்றும் வார்டு எண்10 மின்னப்பன் தெரு உறையூர் ஆகிய பகுதிகளில் வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டு, அப்ப பகுதிகளைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த காரணத்தினால், சம்பந்தப்பட்ட நிர்வாகங்களை கண்டித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

 

 

இதுகுறித்து மாநகராட்சி சார்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில், நெஞ்சம் பதப்பதைக்கும் நான்கு வயது பெண் குழந்தையின் துர் மரணத்திற்கு காரணம் வண்ணாங் கோவில் பகுதியில் செயல்படும் பாரம்பரிய முறை வைத்தியம் என்றும்,

அதேபோல, ஒரு மாதமாக தொடர்ந்து நடைபெற்ற உள்ளூர் கோயில் திருவிழாக்களில் அதிகமான மக்கள் கூடியதாலும், அங்கு பொதுமக்களால் வழங்கப்பட்ட அன்னதானங்கள் மூலமாக ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று நிரூபிக்கப்படாத சந்தேகத்திலேயே ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எங்களுக்கான ஐயம் எல்லாம், கடந்த ஒரு வருட காலமாகவே, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல வார்டுகளிலும் சுகாதாரமற்ற குடிதண்ணீர் பற்றிய பல புகார்கள் எழுந்துள்ளதை அனைவரும் அறிவோம். சில வார்டுகளில் உள்ள குடிநீர் தொட்டிகளின் அவலம் பற்றி தொலைக்காட்சி செய்திகளாகவும் வந்துள்ளன.

எந்த சந்தேகமும் இல்லாமல் பொது மக்கள் பயன்படுத்தும், வரி செலுத்தும் மக்களுக்காக வழங்கப்படும் குடிதண்ணீரின் சுகாதாரத்தை பேணி காக்க வேண்டியது மாநகராட்சியின் கடமை.

மக்களிடமிருந்து புகார் வந்தால் அதை மூடி மறைக்க அவசரம் காட்டாமல், நிரந்தர தீர்வை காண வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்படும் ஜனநாயக நிர்வாகங்களின் கடமை.

ஆனால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களையோ, சந்தேகங்களையோ நிரந்தரமாக போக்க வேண்டிய மாநகராட்சி, திருவிழா, அன்னதானம் என்று பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்றும் வரும் மக்களின் பழக்கவழக்கங்களின் மீதே குற்றத்தை திசை திருப்புவது, நிரூபிக்கப்படாத நிலையில் அதுதான் காரணம் என்று ஒரு அரசாங்க நிர்வாகமே சந்தேகத்துடன் ஒரு அறிக்கை வெளியிட்டிருப்பது என்பது ஏற்படவில்லை.

நகராட்சியை நிர்வாகிக்கும் அமைச்சரின் தொகுதியில் நடந்திருப்பதால், அவரின் கவனத்திற்கு செல்லக்கூடாது என்று அவசர அவசரமாக, ஏதோ ஒரு நிர்பந்தத்தின் காரணமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கலாம் என்பது மக்களின் ஐயப்பாடு.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, கடந்த ஒரு வருடமாக, தனது எல்லைக்குட்பட்ட அத்தனை வார்டுகளிலும், இதுநாள் வரை மக்களால் கூறப்பட்ட புகார்கள், பத்திரிகையிலும் தொலைக்காட்சிகளிலும் வந்த செய்திகள், மக்கள் பிரதிநிதிகள் வைத்திருக்கும் கோரிக்கைகளை போர்க்கால அடிப்படையில ஆராய்ந்து, எவ்வித நிர்பந்தத்திற்கும் பணியாமல், மக்களின் அடிப்படை உரிமையான குடிதண்ணீர் வழங்களில் உள்ள அத்தனை பிரச்சனைகளையும் களைந்து, தற்காலிக தீர்வுகளிலேயே காலத்தை ஓட்டாமல், தொலைநோக்குப் பார்வையுடன் நிரந்தர தீர்வுகளை காண வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.

புதிய கட்டிடங்கள், அலங்கார நீரூற்றுகள், வண்ண விளக்குகளை விட மக்களின் அடிப்படை வாழ்வாதாரமே பெரிது.

மக்கள்செல்வர் வழியில்
ப.செந்தில்நாதன் BE, MBA(UK), Ex MC,
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர்,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்