Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

சட்டவிரோத நடன விருந்து! திருச்சி ஓட்டலில் அதிரடி சோதனை நடத்திய போலீசார்

திருச்சி – திண்டுக்கல் சாலை, தீரன் நகர் பகுதியில் உள்ள ஓட்டல் மதுபான பாரில் அனுமதியின்றி டிஜே இசையுடன் நடன நிகழ்ச்சி நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியது. மேலும், இந்நிகழ்ச்சிக்கு பெண்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, கன்டோன்மென்ட் காவல்துறை உதவி ஆணையர் யாஸ்மின் பானு தலைமையிலான போலீஸ் குழு அந்த ஓட்டலின் செயல்பாடுகளை ரகசியமாக கண்காணித்தனர்.

நேற்று இரவு 7 மணிக்கு பின்னர், அந்த ஓட்டலை நோக்கி கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் குவியத் தொடங்கினர். இதனையடுத்து போலீசார் திடீர் நடவடிக்கையாக ஓட்டலுக்குள் நுழைந்து சோதனை நடத்தினர்.

சோதனையில், அரசு அனுமதி இல்லாமல் டிஜே இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டதும், அதில் 3 பெண்கள் மற்றும் ஒரு சிறுமி உட்பட மொத்தம் 14 பேர் பங்கேற்றிருந்ததும் தெரிய வந்தது. மேலும், நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட சில ஒலிப் பெருக்கி சாதனங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அந்த இடத்தில் இருந்த அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சிலரை இன்று காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டது. பெண்கள் மற்றும் சிறுமிக்கு போலீசார் அறிவுரை வழங்கி பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, ஓட்டல் மேலாளர் ஸ்டான்லியை எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கை, சட்டவிரோத பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு எதிராக காவல்துறை கடுமையாக கண்காணித்து வருகிறது என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்