திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்திற்கு அருகிலுள்ள கன்டோன்மெண்ட் ஒத்தகடை பகுதியில் இருந்து முத்தரையர் சிலை சிக்னல் வரை செல்லும் பிரதான சாலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து கடுமையாக இடையூறாகின்றது. முக்கியமாக, வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தும் நடைமுறை பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
அமெரிக்கன் மருத்துவமனையில் இருந்து கான்வென்ட் ரோடு செல்லும் வாகனங்கள், எதிர் திசையில் இருந்து வரும் வாகனங்களுடன் ஒரே வழியில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இந்த நிலையில், டி.ஜே. ஆட்டோமொபைல்ஸ் கடை முகப்பு பகுதியில் இருந்து முத்தரையர் சிலை சிக்னல் வரை வாகனங்களை நிறுத்தாமல் இருக்க அதிகாரிகள் எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும். மேலும், போக்குவரத்து ஒழுங்குமுறையை மேம்படுத்த, காவல்துறை சார்பில் மாநகராட்சிக்கு சென்டர் மீடியன் அமைப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மார்சிங்பேட்டை காவலர் குடியிருப்பு செல்லும் வழியில், சாலையின் நடுவே அமைந்துள்ள மின் கம்பம் மற்றும் அதின் கீழ் செயல்படும் தள்ளுவண்டி கடைகள் போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக உள்ளன. இதைத் தவிர்க்க, பொதுமக்கள் அந்த மின் கம்பத்தை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து செயல் படின், போக்குவரத்து நெரிசலை குறைத்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை எளிதாக்க முடியும்.