மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன வசதிக்காக திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை வரை தங்குதடையின்றி செல்ல ஏதுவாக நீர்நிலைகளை தூர்வாரி சீரமைக்கும் பணிகளை போர்க் கால அடிப்படையில் விரைந்து முடிக்க தமிழ்நாடு அரசு நீர்வள ஆதாரத்துறை சார்பில் கோரையாற்றில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆனால் திருச்சி கோரையாற்றில் முறையாக தூர்வாரப்படாமல் மண்தூர்ந்து, ஆகாயத்தாமரை, வேலிகாட்டாமணக்கு செடிகளும் மண்டியுள்ளதோடு கருவேலமரங்களும் ஆற்று நீரோட்டத்தை தடை செய்தும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆறுகள் நெடுகிலும் படர்ந்து கிடக்கிறது.
இவைகள் அனைத்தும் மழைக் காலங்களில் ஆற்றுநீரில் அடித்து சென்று காவிரி ஆற்றில் கலந்து மிகப் பெரிய மாசு ஏற்படுத்தி வருகின்றது.
அதே நேரத்தில் கோரையாற்றில் அதிகளவு தண்ணீர் வரும் நேரத்தில் நீர் தேங்கி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டும் வயலூர் ரோடு, சீனிவாச நகர், பிராட்டியூர் மற்றும் கருமண்டபம் பகுதிகள் மூழ்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது
முக்கிய வடிகாலாக திகழக்கூடிய கோறையாற்றில் சூழ்ந்திருக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வாரி தண்ணீர் தாரளமாக காவிரி ஆறு வரை செல்லும் அளவிற்கு வழிவகை செய்ய வேண்டுமென பொது மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.