Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

இது நம்ம ஊருசெய்தி திருச்சி…

1. திருச்சியில் மதுபானம் விற்பனை செய்த 2 பேர் கைது

திருச்சி ஆக.16: திருச்சி பொன்மலைப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பொன்மலை இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மதுபான பாட்டில்களை விற்பனை செய்ததாக திருவெறும்பூர் அண்ணா நகரை சேர்ந்த பிரபாகரன், வயது 38, என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரம் தேசியமயமாக்கப்பட்ட ஏடிஎம் அருகே மதுபான பாட்டில்களை விற்பனை செய்ததாக திருவெறும்பூர் அண்ணா நகரை சேர்ந்த ரூபன் ராஜ், வயது 25, என்பவரையும் அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர். இந்த இரண்டு வழக்குகளிலும் கைது செய்யப்பட்ட பிரபாகரன் மற்றும் ரூபன் ராஜ் ஆகிய இருவரையும் போலீசார் பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

2. திருச்சியில் புகையிலை விற்பனை செய்த 2 பேர் கைது
திருச்சி ஆக.16: திருச்சி காஜாமலை பேருந்து நிறுத்தம் அருகே புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கே.கே.நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக மணப்பாறை அருகே பனையம் குறிச்சி கிராமத்தை சேர்ந்த வினோத், வயது 24, என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 60 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் திருச்சி புத்தூர் ஆபீசர் காலனி பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ததாக லால்குடி அருகே மாந்துறை நெடுஞ்சாலக்குறிச்சியை சேர்ந்த இளையராஜா, வயது 43, என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 80 கிராம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

3. திருச்சி அருகே ரெயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழப்பு
திருச்சி ஆக.16: திருச்சி ரெயில் நிலையத்திற்கும் பெட்டவாய்த்தலை அருகே உள்ள குமாரமங்கலம் ரெயில் நிலையத்திற்கும் இடையே ரெயிலில் அடிபட்டு சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி, அடையாளம் காணும் வகையிலும் பிரேத பரிசோதனைக்காகவும் திருச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். இறந்த மூதாட்டி யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியாத நிலையில், ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

4. திருச்சியில் ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு
திருச்சி ஆக.16: திருச்சி கண்டோன்மென்ட் கருமண்டபம் கணபதி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். இவரது மனைவி மலர்விழி, வயது 54, கடந்த 12ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு உடுமலைப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து அதிலிருந்த 9 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து வீட்டிற்கு வந்த மலர்விழி, சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

5. திருச்சியில் பனியன் வியாபாரி மயங்கி விழுந்து உயிரிழப்பு
திருச்சி ஆக.16: திருச்சி வயலூர் ரோடு சாந்தாஷீலா நகரை சேர்ந்தவர் அமீர்ஜான், வயது 58. இவர் சைக்கிளில் பனியன் வியாபாரம் செய்து வந்தார். கடந்த 12ஆம் தேதி உய்யக்கொண்டான் திருமலை பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமீர்ஜான் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்