சென்னை: தமிழ்நாடு திமுக அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் தமிழ் புத்தாண்டு நாள் குறித்த விவாதம் கடந்த பல வருடங்களாக நடந்து வருகிறது. 2006-11 வரையிலான திமுக அரசில் தை ஒன்றுதான் தமிழ் புத்தாண்டு என்று அறிவிக்கப்பட்டது.சித்தரையில் புத்தாண்டு கொண்டாடுவது தமிழ் வழக்கம் இல்லை. அது சம்ஸ்கிருத வழக்கம். தை மகளை வரவேற்கும் முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்பது திமுகவின் நிலைப்பாடு.பல தமிழ் அறிஞர்களும் தை 1 அன்றுதான் தமிழ் புத்தாண்டு என்று கூறி உள்ளனர். நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரை இல்லை தமிழ் புத்தாண்டு. தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்று பாரதிதாசனும் கூட தனது கவிதையில் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனாலும் சித்திரைதான் தமிழ் புத்தாண்டு என்று ஒருசாரார் வாதம் வைப்பது உண்டு.சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு. சமஸ்கிருத மாத பெயர்களிலேயே தமிழ் புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்றும் இன்னொரு சாரார் கருத்து தெரிவித்து வருகிறார்கள். கடந்த அதிமுக அரசில் தமிழ்நாட்டில் புத்தாண்டு சித்திரைத்தான் என்று மீண்டும் மாற்றப்பட்டது. இந்த நிலையில்தான் தமிழக அரசின் பொங்கல் தொகுப்புக்கான பையில் தை புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இணையத்தில் வெளியாகியுள்ள புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பிற்கான பையில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு மீண்டும் தை 1ம் தேதியை புத்தாண்டு என்று அறிவிக்க போகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பாஜக மூத்த தலைவர் எச். ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக எச். ராஜா செய்துள்ள போஸ்டில், திமுக திருந்தாது. இந்துக்களின் மதநம்பிக்கை மற்றும் பண்டிகை நாட்களில் அரசு தலையிடுவது வன்மையாக கண்டிக்கத் தக்கது மட்டுமல்ல மதசார்பின்மைக்கு விரோதமானதுமாகும். தமிழ் புத்தாண்டு சித்திரையே. கிறித்தவர்களோ முஸ்லிம்களோ இதை கொண்டாடுவதில்லை. இது இந்து பண்டிகையே. தி.மு.க வை புறக்கணிப்போம், என்று குறிப்பிட்டுள்ளார்.