திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பெண் கிராம நிர்வாக அலுவலர்- வியாபாரி மீது தாக்குதல் சமூக வலைதளங்களில் சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு
திருச்சி காந்தி மார்க்கெட் கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர்
கலைவாணி. இவர் திருவரங்கத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள புளி கடையில் புளி வாங்கி சென்றதாக தெரிகிறது. பிறகு சில நாட்களுக்கு பிறகு மீண்டும் அதே புளி கடைக்கு சென்று வியாபாரிடம் நீங்கள் கொடுத்த புளி சரியில்லை எனக்கூறி வியாபாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெண் கிராம நிர்வாக அலுவலர் தான் வாங்கிய புளியை வியாபாரின் கடை மீது வீசி எறிந்தார். இதில் ஆத்திரம் அடைந்த கடையில் வேலை பார்த்த சிலர் கிராம நிர்வாக அலுவலரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டு அவரை கீழே தள்ளி திட்டியதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து 10-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு வந்து புளி கடை வியாபாரி மற்றும் பெண் ஊழியர்கள் சிலரை தாக்கி கடையை சேதப்படுத்தியதாக தெரிகிறது.. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இது சம்பந்தமாக காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் கலைவாணி புகார் கொடுத்துள்ளார். புகார் பேரில் போலீசார் புளி கடையின் உரிமையாளர் முகமது சையது இப்ராஹிம் மற்றும் கடையில் பணிபுரியும் மூன்று பெண்கள் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதே போன்று புளிக்கடையின் உரிமையாளர் முகமது சையது இப்ராஹிம் கொடுத்த புகாரின் பேரில் கடையை சூறையாடி, தாக்கிய அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதற்கிடையில் வியாபாரியை தாக்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது ஆதரவாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்டிபிஐ கட்சியின் வர்த்தக பிரிவு அணியினர் மாவட்ட கலெக்டர் யிடம் புகார் மனு அளித்தனர்.