திருச்சி மாவட்டம் துறையூர் மங்கம்பட்டி தெற்கு காட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகள் மனோரஞ்சிதம் (வயது 19).இவர் ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் கல்லூரிக்கு செல்லும் மனோரஞ்சிதம் வீடு திரும்பியதும் செல்போனும் கையுமாக இருந்துள்ளார்.
எப்போதும் செல்போனில் மூழ்கிக் கிடப்பதை கண்டு சந்திரசேகருக்கு கோபம் ஏற்பட்டது. அவர் மகளை கண்டித்தார்.
இதனை அவரால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இந்த நிலையில் வீட்டிலிருந்த மனோரஞ்சிதம் திடீரென மாயமானார். இரண்டு நாட்களாக பெற்றோர்கள் மகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். இருந்தபோதிலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து சந்திரசேகர் உப்பிலியபுரம் போலீசில் புகார் செய்தார். அதில் மாயமான தனது மகளை தேடி கண்டுபிடித்து தருமாறு தெரிவித்துள்ளார்.
காதலுடன் ஓட்டம்
இதேபோன்று புலிவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்ஜினியரிங் மாணவி ஒருவர் மாயமானார். முசிறி கல்லடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் வைஷ்ணவி (வயது19).இவர் கண்ணனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 6-ம் தேதி காலையில் வீட்டிலிருந்து கல்லூரிக்கு புறப்பட்டு சென்ற அவர் பின்னர் மாலை வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள் ஒரு வாரத்துக்கு மேலாக மகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.
அதைத் தொடர்ந்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வைஷ்ணவியை புலிவலம் போலீசார் தேடி வருகின்றனர்.
விஷம் குடித்து முதியவர் தற்கொலை
திருச்சி மார்ச் 13-
தொட்டியம் அருகே உள்ள கரட்டுப்பட்டி பெரியசாமி (வயது 48) கூலித் தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மதுவுக்கு அடிமையானார். தினமும் வேலைக்கு சென்று மாலை வீடு திரும்பும் போது மது குடித்து விட்டு தான் வீட்டுக்கு செல்வார். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று முன் தினம் வேலைக்குச் சென்ற பெரியசாமி வீடு திரும்பவில்லை. பின்னர் மறுநாள் காட்டு புத்தூர் பஸ் நிலையப் பகுதியில் மயங்கி விழுந்து இறந்து கிடப்பதாக மனைவி சித்ராவுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் காட்டுப்புத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்னொரு சம்பவத்தில் காட்டுப்புத்தூர் பகுதியில் முதியவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்தார். தொட்டியம் காடுவெட்டி நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (65).
இவருக்கு கடந்த 6 மாதமாக வயிற்று வலி இருந்தது. இதற்காக நாட்டு மருத்துவம் பார்த்து வந்தார். இருப்பினும் வயிற்று வலி தீரவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார். உறவினர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கே சிகிச்சை பலன் அளிக்காமல் பழனிவேல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மகன் ராஜ் குமார் காட்டுப்புத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார்.
கல்லூரி பேராசிரியையை மரக்கட்டையால் தாக்கி மோட்டார் சைக்கிள் செல்போன் பறிப்பு
திருச்சி வ உ சி ரோடு கேலக்ஸி டவர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி சீதாலட்சுமி. இவர் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் இசிசி துறை தலைவராக பணியாற்றி வருகிறார். வழக்கமாக இவர் திருச்சி வெஸ்ட்ரி நர்சரி பள்ளி அருகாமையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மைதானத்தில் நடைப்பயிற்சி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதன்படி நேற்று நடைப்பயிற்சி செல்வதற்காக தனது மொபட்டில் வந்தார். பின்னர் நடைபயிற்சி முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக தனது வாகனத்தை எடுக்க வந்தபோது அங்கு நின்ற ஒரு மர்ம நபர் அவரது தலையில் மரக்கட்டையால் திடீரென தாக்கினார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவரது கால்களை பிடித்து இழுத்து சிறிது தூரம் சென்று படுக்க வைத்து விட்டு அவரது மொபட் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றான்.
இது தொடர்பாக சீதாலட்சுமி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் பேராசிரியை தாக்கி மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்துச் சென்றவர் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பழம் ஆனேரி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 32)என்பதும், தற்போது இவர் திருச்சி காந்தி மார்க்கெட் தாராநல்லூர் கீழக்கடை பஜார் பகுதியில் வசித்து வருபவர் என்பதும் தெரிய வந்தது தலைமறைவாக இருக்கும் செந்தில்குமாரை போலீசார் தொலைபேசி தேடி வருகின்றனர் பேராசிரியையை தாக்கி மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை
சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு
திருச்சி பொன்மலை தங்கேஸ்வரி நகர் கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் அக்பர் இவரது மனைவி நூறல் அஸ்மா (வயது 25) கணவன் மனைவி இருவரும் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு படுக்கை அறையில் தூங்கினர்.
அப்போது நள்ளிரவு அவர்களது வீட்டு படிக்கட்டில் மர்ம நபர் நடந்து செல்லும் சப்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தனர் முன்பக்க வாசலை திறந்து பால்கனிக்கு வந்து பார்த்தபோது கொள்ளையன் ஒருவன் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்து ஓட்டம் பிடித்தால் பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த ஐந்து கிராம் கம்மல் மற்றும் ரூபாய் ஐந்தாயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை அவன் திருடி சென்றது தெரியவந்தது இது தொடர்பாக நூறல் அஸ்மா பொன்மலை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அரியலூர் சிமெண்ட் ஆலை ஊழியர் சுருண்டு விழுந்து சாவு
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் செட்டிநாடு சிமெண்ட் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் வீரக்குமார் (வயது 48) இவர் அரியலூர் சிமெண்ட் ஆலையில் பிட்டராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 10 ந்தேதி ஈரோட்டில் உள்ள சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வதற்காக அரியலூரில் இருந்து திருச்சி மத்திய பஸ் நிலையம் வந்தார். அப்போது பஸ் நிலைத்தில் திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவரது மூளை நரம்பு வெடித்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பல அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
பாஜக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மனு அளிக்கும் போராட்டம்
மத்திய அரசு பட்டியல் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றது. இந்த நிதியினை மாநில அரசுகள் தங்களின் மாநிலத்தில் உள்ள பட்டியல் சமுதாய மக்களுக்கு செலவு செய்ய வேண்டும். ஆனால் தமிழகத்தில் ஆட்சி புரிந்துள்ள திராவிட கட்சிகள் மத்திய அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் திட்ட நிதி மற்றும் பட்டியல் சமூகத்துக்கான துணை திட்ட நிதியினை முறையாக செலவு செய்யாமல் திருப்பி அனுப்புவதும், தங்களுடைய மனம் போன போக்கில் செலவிடுவதை கண்டித்து திருச்சி மாநகர், மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பில் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட பட்டியல் அணி தலைவர் யசோதன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் திருச்சி மாநகர்,மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் பொன் தண்டபாணி, வரகனேரி பார்த்திபன்,சந்துரு, ஊடகப்பிரிவு இந்திரன், செந்தில்குமார், மெய்யப்பன், சந்திரசேகர், மல்லி செல்வராஜ்,மரியா, சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில்
மூதாட்டி மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி
திருச்சி மாவட்டம் முசிறி பைத்தம்ப்பாறை செட்டியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அரங்கராஜன். இவரது மனைவி சரஸ்வதி(வயது 60 | இவர் இன்று திருச்சி கலெக்டர் அலுவலக குறைதீர்க்கும் முகாமிற்கு வந்தார். பின்னர் அவர் கலெக்டர் அலுவலகத்தில் பின்புறம் பொதுமக்கள் மனு அளிக்கும் பகுதியில் திடீரென தலையில் மன்னனை ஊற்றி விட்டு தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அவர் கூறும் போது,
எனது கணவர் கோவிந்தசாமி என்பவரிடம் கிரையம் செய்து பெற்ற இடத்தை கிராம நிர்வாக அலுவலர் பட்டா வழங்காமல் இழுத்தடித்து வந்தார்.
இந்த நிலையில் அந்த நிலத்தில் நின்ற மரங்களை பொக்லைன் எந்திரம் மூலம் வெட்டி அகற்றி விட்டனர். தற்போது அந்த நிலத்தை சிலர் அபகரிக்க முயற்சி செய்கிறார்கள். ஆகவே சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து எனது நிலத்தை காப்பாற்ற கலெக்டர் உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா வழங்க கால தாமதம் செய்யும் கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார். பிறகுமாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் நேரில் வந்து மனுவை வாங்கிக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மூதாட்டி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.