Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்

0

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது. பகல் பத்து நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது.

 

பகல்பத்தின் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 4.48 மணிக்கு நடந்தது.

அதிகாலை 3.30 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து சிம்மகதியில் நம்பெருமாள் புறப்பட்டு, அதிகாலை 4.48 மணிக்கு நம்பெருமாள் சொர்க்கவாசலில் எழுந்தருளினார். நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெருமாளை பார்த்த பக்தர்கள் ரெங்கா ரெங்கா என விண்ணதிர கோஷமிட்டு நம் பெருமாளை தரிசித்தனர்.

சொர்க்கவாசல் திறப்பையொட்டி தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும்ஏராளமான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது நேற்று இரவே கோவில் வளாகத்தில் குவிந்து இருந்தனர்.

சொர்க்கவாசல் திறப்பு வைபவத்தையொட்டி பெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார். வைகுண்ட ஏகாதசியான இன்று முக்கிய பிரமுகர்கள் மற்றும் சிறப்பு அனுமதி அட்டை பெற்று இருந்தவர்கள் கோவிலுக்குள் அதற்காக அமைக்கப்பட்டிருந்த தனி பாதைவழியாக செல்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.

இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் இரவில் இருந்தே நீண்ட வரிசையில் காத்து நின்றனர். நம்பெருமாள் சொர்க்கவாசலில் எழுந்தருளிய பின்னர் அந்த வழியாக சென்று அவரை தரிசிப்பதற்காகவும், மூலவரை முத்தங்கி சேவையில் தரிசனம் செய்வதற்காகவும் கோவில் பிரகாரங்களில் ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து காத்து இருந்தனர்.

வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் விழாக்கோலம் பூலோக வைகுண்டமாக ஜொலிக்கிறது. ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில், 3,000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், இன்று கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று முதல் ராப்பத்து உற்சவம் தொடங்கி வரும் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வையொட்டி இன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்