அரசு பெண் வழக்கறிஞர் மற்றும் அவரது மகளுக்கு அரிவாள் வெட்டு : ஜாமீனில் இருந்து வெளியே வந்த காதலன் செய்த வெறிச்செயல்
காதல் விவகாரத்தில் அரசு வழக்கறிஞர் மற்றும்அவரது மகளுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் ஜமீலா பானு. இவரது மகள் நிஷா. இவர் சேலம் அரசு சட்டக் கல்லூரியில் பயின்றபோது, அதே கல்லூரியில் பயின்ற ரகுமான்கான் என்பவர் நிஷாவை காதலித்து வந்துள்ளார்.
மேலும் நிஷாவிடம் தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக ஜமீலாபானு சேலத்தில் அளித்த புகாரின் பேரில் சேலம் போலீசார் ரகுமான் கானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளிவந்த ரகுமான்கான், திருப்பூர் குமரன் சாலையிலுள்ள ஜமிலாபானு அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்த ஜமீலா பானு, அவரது மகள் நிஷா ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
வெட்டுப்பட்ட இருவரும் சத்தமிடவே, ரகுமான்கான் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும், அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஜமீலா பானு மற்றும் அவரது நிஷா ஆகியோரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரதான சாலையில் பட்டப்பகலில் பெண்கள் இருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது