திருச்சி மாவட்டம் லால்குடி மேல தெருவை சேர்ந்தவர் ப. சிவனேசன் (43). விவசாயி. இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு மகன் மற்றும் மகள் ஆகியோர் உள்ளனர். விவசாயி சிவனேசன் உள்ளிட்ட 6 குடும்பங்கள் லால்குடி வந்தலை மேலத்தெரு பகுதியில் அரசு பள்ளி அருகே 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இதனால் அருகில் குடியிருக்கும் வீடுகளுக்கும் பள்ளியின் சுற்று சுவருக்கும் இடையே 2 அடி முதல் 3 அடி வரை மட்டுமே நடைபாதைக்கு இடம் விடப்பட்டுள்ளதால் விவசாயி கணேசன் உள்ளிட்ட குடும்பத்தினருர் குறுகிய பாதை இருப்பதால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து புள்ளம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், லால்குடி வட்டாட்சியரிடமும் நடவடிக்கை எடுக்குமாறு மனு அளிக்கப்பட்டதாம். அந்த மனுவின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
எனவே, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விவசாயி சிவனேசன் மற்றும் அவரது மனைவி ரேவதி ஆகியோர் திடீரென உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு அருகில் இருந்த நுண்ணறிவு பிரிவு காவலர் பொன்னுசாமி மற்றும் செய்தியாளர்கள், மண்ணெண்ணை ஊற்றி கொண்ட தம்பதியினரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். இது குறித்த தகவலின் பேரில், கண்டோன்மெண்ட் காவல்நிலைய போலீசார் தம்பதியை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்