திருச்சியில், தொழிலாளி கையை வெட்டித் துண்டாக்கிய இருவரை போலீஸôர் கைது செய்துள்ளனர்.
திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் ராமு (48) கூலித் தொழிலாளியான இவர், பாலக்கரை போலீசாருக்கு இன்பார்மராக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக அப்பகுதியில் கஞ்சா வியாபாரிகள், ரவுடிகள் நடமாட்டம் குறித்து அவ்வப்போது போலீசாருக்கு ராமு தகவல் தருவாராம். எனவே, அப்பகுதியைச் சேர்ந்த விஜய் (25), ஹரி (25) ஆகியோருக்கும் ராமுக்கும் நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. விஜய், ஹரி இருவர் மீதும் பாலக்கரை, அரியமங்கலம், தில்லைநகர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா விற்பனை, அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலக்கரை காவல்நிலைய, சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரன் என்பவரை விஜய் வெட்டிய வழக்கும் நிலுவையில் உள்ளதால், இருவரும் தலைமறைவாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் பாலக்கரை பகுதிக்கு வந்த விஜய், ஹரி இருவரும், ராமுவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். திடீரென இருவரும் அரிவாளால் ராமுவை வெட்ட முயல அவர் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். ஆனாலும் ராமுவை விரட்டி பிடித்த அவர்கள் எங்களை காட்டிக்கொடுத்த கை இதுதானே? என்று கூறி அரிவாளால் வெட்டியதில் ராமுவின் வலது கை துண்டானது. மேலும் இடது கையிலும் பலத்த வெட்டு விழுந்துள்ளது. அப்போது துண்டான கையை எடுத்துக் கொண்ட இருவரும் இருசக்கர வாகனத்திலே ஏறி அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து , கை துண்டான நிலையில் உயிருக்கு போராடிய ராமுவை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
தொடர்ந்து போலீஸôர் மேற்கொண்ட தீவிர விசாரணையில், விஜய், ஹரி இருவரும் மறைந்திருந்த இடம் தெரியவந்தது. இதனையடுத்து திங்கள்கிழமை இருவரையும் கைது செய்துள்ளனர்.