திருநீல கண்டக் குயவர், மாணிக்க வாசகர் போல் இயற்பெயர் தெரிய வராத நாயன்மார்களில் ஒருவர். அடியார் குறிப்பு அறிந்து தொண்டு செய்ததால் திருக் குறிப்புத் தொண்டர் என்று பெயர் பெற்றார். ⚜️ *கச்சிப் பல தளியும்* (அப்பர்) என ஈஸ்வரன் கோயில் நிறைந்த காஞ்சி புரத்து வண்ணார். தினமும் ஒரு அடியார் துணியையாவது துவைத்துக் கொடுத்த பின்னரே உணவு உண்பதை நியமாகக் கொண்டவர். ஒரு நாள் அடியார் ஒருவரும் கிடைக்காத போது கச்சி ஏகம்பரே அடியார் வடிவில் வந்தார். அன்றைக்குள் தோய்த்து உலர்த்திக் கொடுப்பதாக வாக்களித்து ஆளுடை அடியாரிடமிருந்து ஆடையைப் பெற்றுக்கொண்டு நீரில் நனைத்தார். ஈசன் அருள் போல் பெரு மழை பெய்யத் தொடங்கி நிற்காமல் நாள் முழுவதும் பொழிந்து கொண்டே இருந்தது. மாலைப் பொழுதும் வந்தது. அடியாருக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத அபச்சாரம் ஆனதால் வேறு வழி இல்லாமல் உயிர் விடத் துணிந்து தோய்க்கும் கல்லில் தலையை மோதிய போது ஏகாம்பரேஸ்வரர் திருக் காட்சி கொடுத்தருளினார். *காமாட்சி பல்லாண்டுகள் கடும் தவம் செய்து காட்சி பெற்ற ஒற்றை மா மரக் கடவுளின் திருக் காட்சி கண்ட குறிப்புத் தொண்டர் மும்மலம் நீங்கி எண் குண நிலை அடைந்து சிவ கணமாய் சிவ லோகத்தில் நிலை பெற்றார்*. யார் எந்த விரதம் கொண்டுள்ளனரோ அதன் வழியே அவரை *ஆட்கொண்டு முக்தி அருளித் தன்னுடன் சேர்க்கும்* ஆளுடை நாயகனது அளவற்ற கருணையை *விரதம் கொண்டாட வல்லானும்* என்று திருநாவுக்கரசர் போற்றுகிறார். சிவப்பிரியா .