குஜராத்தில் 6-12ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடத்தில் பகவத் கீதையை பாடத்திட்டங்களில் ஒன்றாக சேர்க்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான குஜராத் அரசு முக்கியமான சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. குஜராத் அரசின் இந்த முடிவை காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வரவேற்று உள்ளன.
குஜராத் மாநில அரசின் அறிவிப்பு நேற்று மாலை வெளியானது. அந்த சுற்றறிக்கையில், இந்தியாவின் கலாச்சரம், பழங்கால வரலாறு, நமது பாரம்பரியம் ஆகியவற்றை பறைசாற்றும் விதமாக இந்த நூல் இருப்பதால், அதை பாடத்திட்டத்தில் சேர்ப்பதாக குஜாரத் அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவின் கலாச்சாரம் அறிவாற்றல், பழம்பெருமை ஆகியவற்றை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மாணவ, மாணவியர் இடையே புனிதமான கருத்துக்களை ஏற்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
பகவத் கீதையின் மதிப்புகள், கோட்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் என்பவை எல்லா மதத்தினராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.
6ம் வகுப்பில் இருந்து கீதை தொடர்பான பாடங்கள் கற்றுத்தரப்படும். ஒவ்வொரு வருடமும் பாடத்திட்டத்தில் கீதையின் பல்வேறு பகுதிகள் இடம்பெறும். அதன் சாராம்சங்கள் இடம்பெறும்.
இதன் மூலம் கீதை மீதான மாணவர்களின் ஆர்வம் அதிகரிக்கும் என்று குஜராத் அரசு தெரிவித்துள்ளது. இது குஜராத் மாணவர்களை நல் வழியில் சிந்திக்க வழி வகுக்கும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ஜீத்து வாகனி தெரிவித்துள்ளார்.
முதலில் பகவத் கீதையின் முக்கியத்துவம் பற்றி பாடம் எடுக்கப்படும். அதன்பின் அதில் இருக்கும் மந்திரங்கள்., பாடல்கள், கட்டுரைகள் கற்பிக்கப்படும்.
அதை வைத்து தேர்வுகள், போட்டிகள், வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு கீதை படிப்பதற்கான ஆர்வம் தூண்டப்படும். இது தொடர்பான அனைத்து உதவிகளும் அரசு தரப்பில் வழங்கப்படும்.
மாணவர்கள் எல்லோருக்கும் இதற்காக பகவத் கீதை வழங்கப்படும். 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆழ்ந்த பகவத் கீதை கருத்துக்கள் பாடமாக எடுக்கப்படும். அதேபோல் ஆடியோ, வீடியோ மூலமும் பகவத் கீதை கருத்துக்கள் வகுப்பில் எடுக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ஜீத்து வாகனி தெரிவித்துள்ளார்.
குஜராத் அரசின் இந்த முடிவை காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வரவேற்று உள்ளன.
குஜராத் பிரிவு காங்கிரஸ், இந்த முடிவை வரவேற்கிறோம் என தெரிவித்துள்ளது.
இந்த முடிவு சிறப்பானது, மாணவர்களுக்கு பெரிய பலன் அளிக்கும் என்று ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் பிரிவு தெரிவித்துள்ளது.