Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

என்கவுண்ட்டர் செய்த எஸ்.ஐ இசக்கி ராஜா சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர்.

0

நெல்லையில் பிரபல ரவுடி நீராவி முருகனை திண்டுக்கல் காவல்துறையினர் என்கவுட்டர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ரவுடியான நீராவி முருகன் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் திண்டுக்கல்லில் நடந்த ஒரு கொள்ளை சம்பவம் தொடர்பாக நீராவி முருகனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், நீராவி முருகன் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து களக்காடு செல்லும் சாலையில் சுப்பிரமணியபுரம் அருகே பொத்தை பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் சப்இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா தலைமையிலான தனிப்படையினர் நீராவி முருகனை கைது செய்வதற்காக இன்று நெல்லை வந்தனர். அப்போது நீராவி முருகன் காவல்துறையினரை அரிவாளால் வெட்டினார். இதனால் பாதுகாப்பிற்காக எஸ்.ஐ இசக்கிராஜா துப்பாக்கியால் சுட்டதில் நீராவி முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

நீராவி முருகனை என்கவுண்ட்டர் செய்த எஸ்.ஐ இசக்கி ராஜா சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பகுதியில் உள்ள பாறைக்குட்டம் பகுதியைச் சேர்ந்தவர்தான் இந்த இசக்கிராஜா. பள்ளி படிப்பு முதலே விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் திரைப்படங்களில் காவல்துறையினர் குற்றவாளிகளுடன் சண்டையிடுவதைப் பார்த்து, கிக்பாக்ஸிங் கற்றுக்கொண்டிருக்கிறார். ஈட்டி எறிதல், கிக் பாக்ஸிங் போன்ற போட்டிகளில் இவருக்கு அங்கீகாரம் கிடைக்கவே சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் பி.இ, எம்.டெக், எம்.பி.ஏ, எம்.ஏ.கிரிமினாலஜி, பி.எல், டிப்ளமோ ட்ரிப்பிள் இ ஆகிய படிப்புகளைப் படித்திருக்கிறார். படிப்பின்போதும் படிப்பிற்கு பின்னரும் கிக் பாக்ஸிங் மற்றும் ஈட்டி எறிதலில் சர்வதேச அளவில் பதக்கங்களை வென்றிருக்கிறார்.

காவல்துறையில் சேரவேண்டும் என்பது தான் இசக்கிராஜாவின் கனவு. அதைப்போலவே 2016ம் ஆண்டு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் உதவி ஆய்வாளராக வேலையும் கிடைத்துவிட்டது. பயிற்சி முடித்து பணியில் சேர்ந்த இசக்கி ராஜா வெளியில் தெரிய ஆரம்பித்தது 2018ம் ஆண்டு தான். நெல்லைப் பகுதியில் அப்துல்லா என்ற நபர் சண்டியர் குரூப் என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு தொடங்கி அதன் மூலம் சுற்றுவட்டார ரவுடிகளை ஒருங்கிணைத்து கூலிப்படையாக செயல்பட்டுவந்தார். அப்போது ரோந்து பகுதியில் ஈடுபட்டிருந்த இசக்கி ராஜா, சண்டியர் குரூப்பைச் சேர்ந்த ராஜதுரை, கற்பகபாண்டியன் என்ற இரண்டு ரவுடிகளை மடக்கிப் பிடித்தார். அவர்களது செல்போனை பறிமுதல் செய்த அவர் அவர்கள் இருந்த சண்டியர் வாட்ஸ்ப் குரூப்பில் ரவுடிகளை எச்சரித்து ஒரு வாய்ஸ்- நோட்டை போட குரூப்பில் இருந்த ரவுடிகள் அனைவரும் தலைதெறிக்க குரூப்பில் இருந்து வெளியேறினர். சண்டியர் க்ரூப்ப ஆரம்பிச்சு கோவில்பட்டிகுள்ள ரவுடித்தனம் பண்ணனும்னு நினைச்சிங்க சீரழிஞ்சு போயிருவீங்க என்று இசக்கிராஜா பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

மதுரை சம்மட்டிபுரத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூவின் எம்.எல்.ஏ. அலுவலகம் உள்ளது. அங்கு கடந்த 2016ம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் இரண்டு வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பி ஓடிவிட்டனர். குண்டுவீசியவர்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்தவர்களே கூலிப்படையை வைத்து இந்த சம்பவத்தை விசாரணையில் தெரியவந்தது. குண்டு வீசிய இரண்டு பேரில் ஒருவர் பாறைக்குட்டம் ‘மட்டை’ மாடசாமி. அவரை கைது செய்து செய்து தனிப்படையிடம் ஒப்படைத்தார் இசக்கிராஜா. ஜாமீனில் வெளிவந்த மட்டை மாடசாமி இசக்கி ராஜா மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். பின்னர், சில காலம் கழித்து மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடவே அவரைத் தேடிச் சென்றுள்ளார் இசக்கிராஜா.

இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால், இசக்கிராஜாவை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி ஆடியோ ஒன்றை மட்டை மாடசாமி வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த இசக்கிராஜா, மாடசாமிக்கே போன் போட்டு என்னை வெட்டுவேன்னு சொன்னியாமே, சங்கரன்கோயில்ல எந்த இடத்துல இருக்கனு சொல்லு நேர்ல வர்றேன் முடிஞ்சாவெட்டு. காவல்துறை பலத்தோடலாம் வரமாட்டேன், சாதாரண இசக்கிராஜாவா வர்றேன் எந்த ரவுடிக்கு தைரியம் இருக்கோ வந்து வெட்டு என்று சவால் விட்டார் இசக்கி ராஜா.

கோவில் பட்டியில் இருந்து தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டார். அப்போது தென்கரையைச் சேர்ந்த ரவுடி நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராக அவரது வழக்கறிஞர் இசக்கிபாண்டியனுக்கும் இசக்கிராஜாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது இசக்கிராஜா வழக்கறிஞர் இசக்கி பாண்டியனை துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் இசக்கி பாண்டியன் அளித்த புகாரின் பேரில் இசக்கிராஜா மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இசக்கிராஜாவை திண்டுக்கல் சரகத்திற்கு இடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி முருகன் உத்தரவிட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவந்தார் இசக்கிராஜா. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி ஒட்டன்சத்திரம் அருகே, மருத்துவர் சக்திவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேரை கட்டிப்போட்டுவிட்டு 280 பவுன் தங்க நகைகளையும் ரூ 25 லட்சம் ரொக்கத்தையும் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த கார் உள்ளிட்டவைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். கொள்ளையர்களைப் பிடிக்க இசக்கிராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த கொள்ளையில் தூத்துகுடியைச் சேர்ந்த நீராவி முருகன் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரைத் தேடி நெல்லை சென்றபோது நடைபெற்ற சண்டையில் தான் நீராவி முருகனை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றிருக்கிறார் இசக்கிராஜா.

இவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும், காவல்துறையில் தைரியமான ஆளாக அறியப்படும் இசக்கிராஜா ரவுடிகளுக்கு சிம்மசொப்பனமாகவே திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்