நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி கண்டது.
இதையடுத்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கடந்த 2ஆம் தேதி சென்னை ரிப்பன் மாளிகையில் பதவியேற்றபோது, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பதவி ஏற்பில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கடலூர் மாவட்டத்தின் துணை மேயர் பதவி ஒதுக்கப்பட்டது. அதேபோல் ஜெயம்கொண்டம் நகராட்சித் தலைவர், நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர், திண்டிவனம் ,பெரியகுளம் ,ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களின் துணைத்தலைவர் , பெண்ணாடம் ,காடையாம்பட்டி ,மல்லாபுரம் ஆகியவற்றின் பேரூராட்சி தலைவர், கடத்தூர், திருப்போரூர் ,புவனகிரி ,கொளத்தூர் ,அனுமந்தன்பட்டி, ஓவேலி ஆகிய பகுதிகளில் துணைத்தலைவர் பதவி இடங்கள் விசிகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.
இந்த சூழலில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அங்கு அதிரடி திருப்பமாக திமுக வேட்பாளர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் கிரிஜா திருமாறனை எதிர்த்து திமுகவின் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து திமுக வேட்பாளருக்கு 23 வாக்குகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளருக்கு 3 வாக்குகளும் கிடைத்தன . 3 செல்லா வாக்குகளாக பதிவான நிலையில் திமுக வேட்பாளர் ஜெயந்தி வெற்றி பெற்றார்.
இதேபோல தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பதவிக்கு விசிக சின்னவேடி வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் அவரை எதிர்த்து திமுகவை சேர்ந்த சாந்தி என்பவர் வேட்பு மனுத் தாக்கல் செய்து 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக வேட்பாளர்கள் நின்று வெற்றி பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி தர்மத்தை திமுக மதிக்கவில்லை என்று கூறி பாப்பிரெட்டிப்பட்டி சாலையில் 500க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது