புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே ஆர்எஸ்எஸ் நிர்வாகி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இலுப்பூர் வட்டம், இருந்திரப்பட்டி அருகே உள்ள திம்மம்பட்டியைச் சேர்ந்த பிரேமா என்பவரின் வீட்டுக்கு சமாதானபுரத்தைச் சேர்ந்த ராணி மற்றும் தேவசாந்தி ஆகியோர் ஜன.21-ம் தேதி சென்று, மதமாற்றம் செய்ய முயன்றதாகக் கூறி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் மக்கள் தொடர்பாளரான திம்மம்பட்டியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் கணேஷ்பாபு (38) உள்ளிட்ட சிலர், அந்த பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தங்களை வழிமறித்து செல்போன், இருசக்கர வாகனத்தை பறித்துக்கொண்டதாக இலுப்பூர் காவல் நிலையத்தில் அந்த பெண்கள் அளித்த புகாரின்பேரில், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 சட்டப் பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கணேஷ்பாபுவை நேற்று முன்தினம் கைது செய்தனர். இதை அறிந்த பாஜகவினர் இலுப்பூர் காவல் நிலையம் எதிரே திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, நேற்றும் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பாஜகவினர், பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட பாஜக ஒன்றியத் தலைவர் செல்லத்துரை உட்பட 79 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், கணேஷ்பாபு கைது செய்யப்பட்டதை கண்டித்தும், பொய் வழக்குப் பதிவு செய்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜக மாவட்டத் தலைவர் ராமசேதுபதி தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பாஜக முன்னாள் தேசியச் செயலர் எச்.ராஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: திம்மம்பட்டிக்கு வந்த 2 பெண்கள், தாங்கள் மதமாற்றம் செய்ய வந்ததாக கூறியுள்ளனர். அதன்பேரில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், அந்தப் பெண்கள் கொடுத்த பொய்யான புகாரின் மீது வழக்குப் பதிவு செய்து கணேஷ்பாபுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் மதக் கலவரத்தைத் தூண்டுவது தி.க மற்றும் திமுகவினர்தான். நாங்கள் அல்ல என தெரிவித்தார்.
இந்நிலையில், கணேஷ்பாபு கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என பாஜக தலைவர் அண்ணாமலை அரியலூரில் நேற்று தெரிவித்துள்ளார்.