பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்ட நாளில் இருந்தே சர்ச்சைதான். திருப்பத்தூர் மாவட்ட ரேசன் கடைகளில் வழங்கப்பட்ட பொருட்களில் மிளகில் பருத்திக்கொட்டையும், சீரகத்தில் மரத்தூளும் கலந்திருப்பதாக கூறி அனைத்து பொருட்களையும் பொதுமக்கள் சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்புடன் கூடிய 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.பொங்கல் பண்டிகை முடிவடைந்தாலும், இம்மாதம் இறுதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் தொடங்கியதில் இருந்தே பல்வேறு இடங்களில் சர்ச்சை வெடித்து வருகிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்ட நாளில் இருந்தே சர்ச்சைதான். பல்வேறு நியாயவிலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பை எடுத்து செல்ல பைகள் வழங்கப்படவில்லை. கரும்புகளும் தரமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும்பாலான ரேஷன் கடைகளில் கரும்புகள் வழங்கப்படவில்லை என்றும், சில இடங்களில் தரமற்ற கரும்பு, 3 அடி உயரமுள்ள கரும்பு வழங்கப்படுவதாக குடும்ப அட்டைதாரர்கள் குற்றஞ்சாட்டினர்.மோட்டூர் ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளை கொண்டிருக்கும் கடை எண் சி 2513 ல் நேற்று பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கப்பட்டது. பொங்கல் பரிசுத் தொகுப்பு பையில் இருந்த பொருட்கள் தரமற்றவையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தரமற்ற பொருள் வழங்கப்பட்டதால் விரக்தி அடைந்த பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்புகளை பிரித்து சாலையில் கொட்டி வீசி ஆதங்கத்தை தெரிவித்தனர்.
மிளகுக்கு பதிலாக பருத்திக் கொட்டையும், மஞ்சள் தூள் வீட்டிற்கு வெளியே போடும் கோலமாவு போல் உள்ளது எனவும் ரேஷன் அரிசியை அரைத்து ரவையாக கொடுத்திருப்பதாகவும் குற்றம்சாட்டினர். மோட்டூர் நியாய விலை கடை முன்பு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சில மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது. 100 கிராம் மிளகு பாக்கெட்டில் பருத்தி கொட்டை உள்ளது. மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகம் பாக்கெட்டில் மரத்தூள் கலந்துள்ளன. இது குறித்து ரேஷன் கடை ஊழியரிடம் கேட்டால், அவர்கள் பொறுப்பில்லாமல் பதிலளிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
எதற்கும் உதவாத பொங்கல் பரிசு தொகுப்பு எங்களுக்கு எதற்கு வழங்குகிறீர்கள் எனக்கூறி அதை நாங்கள் சாலையில் கொட்டி போராட்டம் நடத்தி வருகிறோம் என்று கூறினார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அலுவலகர்கள் பொதுமக்களிடம் விசாரணை நடத்தி, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தினர். பிறகு பொதுமக்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
காக்கணாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராஜபாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட 100 கிராம் மிளகுக்கு பதிலாக பருத்தி கொட்டையும், அவரைக் கொட்டையையும், வெண்டைக்காய் விதையையும் சேர்த்து மிளகு என்று பாக்கெட் செய்து கொடுத்துள்ளனர். அதேபோல் மிளகாய்த்தூள், தனியாதூள் பாக்கெட்டுகளில் மரத்தூளை கலப்படம் செய்துள்ளனர். தரமற்ற பொருட்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து அந்த புகார் குறித்து உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில், சம்பந்தப்பட்ட உதவி தர ஆய்வாளர் ரவிச்சந்திரன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து கண்காணித்து, உரிய நடவடிக்கைளை உடனுக்குடன் எடுக்கவும் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.