மாம்பழ ஏலம் தொடர்பான மோதல் கொலை வழக்கில் சிக்கியவர், பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டுள்ள பயங்கரம் தென்காசி அருகே நடந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழ இலஞ்சியை சேர்ந்தவர் சின்ன இசக்கி என்ற இசக்கி (வயது 38). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி நந்தினி. இந்த தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். இசக்கி இரவு நேரத்தில் தாமதமாக வீட்டிற்கு வந்தால், வீட்டின் வெளியே உள்ள திண்ணையில் உறங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவும் தாமதமாக வீட்டிற்கு வந்த இசக்கி, திண்ணையில் படுத்து உறங்கியுள்ளார். இன்று அதிகாலை நேரத்தில் இசக்கியின் வீட்டிற்கு வந்த மர்ம கும்பல், உறங்கிக்கொண்டு இருந்த இசக்கியை சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்துள்ளது. இதனால் இசக்கியின் தலை, முகம், கழுத்து பகுதிகள் சிதைந்து, இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகினார்.
கொலையை அரங்கேற்றிய கும்பல் தப்பி சென்றுவிட, நந்தினி அதிகாலை கோலம் போட கதவை திறக்கையில், கணவர் கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு கதறித்துடித்துள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களும் கவலையில் ஆழ்ந்து, பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் குற்றாலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, இசக்கியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குற்றம் நிகழ்ந்த போது சத்தம் கேட்காததால், இசக்கி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது அவரை கொலை செய்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனையடுத்து, அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமிராவை ஆய்வு செய்த காவல் துறையினர், அதில் உள்ள காட்சிகளை சேகரித்து வருகின்றனர். கொலையாளிகள் வெளியூருக்கு சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால், அவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. இசக்கியின் மீது குற்றாலம் மற்றும் தென்காசி காவல் நிலையங்களில் ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன.
கடந்த சில வருடத்திற்கு முன்னதாக மாம்பழ ஏலம் தொடர்பான மோதலில், இசக்கியின் மீது கொலை வழக்கும் பதிவாகியுள்ளது. ஆதலால், கொலைக்கு பழிக்குப்பழியாக இசக்கி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது