கர்நாடகாவில் சமீப காலமாகவே பள்ளி கல்லூரிகளில் மதரீதியான பிரச்சனைகள் தலைதூக்கி வருகின்றன.. கடந்த சில நாட்களுக்கு முன்பு மங்களூரில் ஒரு சம்பவம் நடந்தது..
அங்குள்ள கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர்.. உடனே இந்து மாணவ , மாணவியர் சிலரும் காவி உடை அணிந்து வந்தனர்.
இதையடுத்து, கர்நாடகாவில் பல்வேறு கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது.. அதேபோல, அரசு பியு கல்லூரிகளில் மாணவ, மாணவியர் ஹிஜாப், காவி துண்டுகள் அணியவும் தடை விதிக்கப்பட்டது.. இப்படி தங்கள் மத உடைகளை அணிந்து வந்ததால், இஸ்லாமிய மாணவிகள் சிலர் கிட்டத்தட்ட 3 வாரமாக கல்லூரிக்குள் அனுமதிக்கப்படாமலும் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர்.. அதுமட்டுமல்ல, அவர்கள் ஹிஜாப்பை அகற்றினால்தான் காலேஜுக்குள் அனுமதிப்போம் என்று கல்லூரி நிர்வாகம் பிடிவாதமாக சொல்லிவிட்டது. இந்த விவகாரம் அப்போது பெரிதாக வெடித்தது..
இந்நிலையில், இதே கர்நாடகாவில் ஒரு பள்ளியில் வேறு ஒரு பிரச்சனை வெடித்துள்ளது.. கோலார் மாவட்டத்தில், முல்பாகல் சோமேஸ்வரா பாலய பலே சங்கப்பா அரசு கன்னட மாதிரி மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம்போல் வகுப்புகள் நடந்துள்ளன.. அன்றைய தினம் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவது வழக்கம்.. அதன்படி, அந்த பள்ளியில் இருந்த சில மாணவர்கள், பள்ளி வளாகத்திற்குள்ளேயே தொழுகை நடத்தியதாக கூறப்படுகிறது..
இது குறித்து முறையான புகார்கள், குற்றச்சாட்டுகள் வெளிப்படையாக தெரியவில்லை.. ஆனால், பள்ளியில் தொழுகை நடத்தப்பட்ட விஷயம் கசிந்துவிட்டது.. இதையடுத்து, இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் சிலர் திடீரென பள்ளிக்குள் நுழைந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.. இந்து மாணவர்களின் உரிமைகளை பறிக்கும்போது, இஸ்லாமிய பிள்ளைகளை எப்படி பள்ளிகளுக்குள்ளேயே தொழுகைக்கு அனுமதி தரலாம் என்று, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் உமாதேவியிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்..
ஆனால், தொழுகைக்கு தாம் உத்தரவிடவில்லை என்று தலைமை ஆசிரியர் விளக்கம் தந்தும் அவர்கள் அதை ஏற்பதாக தெரியவில்லை.. தனக்கே தெரியாமல் இது நடந்துள்ளது என்றும், எதிர்காலத்தில் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்… எல்லா மாணவர்களும் எங்களுக்கு சமம்தான்.. நாங்கள் யாரையும் நமாஸ் செய்யவோ அல்லது எதையும் செய்யவோ சொல்லவில்லை என்று உமாதேவி மறுத்துள்ளார்.. பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து கல்வி அதிகாரி கிரிஜேஸ்வரி சொன்னதாவது:
இது சம்பந்தமாக தனக்கு எந்த விதமான புகாரும் வரவில்லை..ஆனால், பிள்ளைகள் நமாஸ் செய்யும் வீடியோவை பார்த்தேன்… சில இந்து அமைப்புகள் எனக்கு அந்த வீடியோவை அனுப்பியிருந்தன… இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்.. அதற்காக ஒரு குழுவும் விசாரணையில் இறங்கி உள்ளது.. இது தொடர்பாக மாவட்ட கலெக்டரும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்’ என்றார். இந்த பள்ளியின் மொத்த எண்ணிக்கையோ 375 பேர்.. முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த சுமார் 165 மாணவர்கள் இருக்கிறார்களாம்…
இதில் சுமார் 25-30 மாணவர்கள் தவறாமல் நமாஸ் செய்வதாகவும், பள்ளிக்கு அடுத்ததாக ஒரு மசூதி உள்ளதால், அவர்கள் அங்கு பிரார்த்தனைக்கு செல்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கிரிஜேஸ்வரி தேவி மேலும் தெரிவித்தார்… இந்த தொழுகை நடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், மற்ற சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் யாரும் இதற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்றும், ஒரே ஒரு இந்து குழுவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இதில் ஈடுபட்டு சர்ச்சையை உருவாக்கிவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2 மாதங்களாக தலைமையாசிரியையின் அனுமதி பெற்றே, வகுப்பறையில் தொழுகை செய்து வருவதாக மாணவிகள் கூறுகிறார்கள்.. ஆனால், தலைமை ஆசிரியையோ, தனக்கு எதுவுமே தெரியாது என்று மறுத்துள்ளார்.. மாணவர்கள் படிக்கும் நேரத்தை தவறவிடக்கூடாது என்பதற்காகவும், பள்ளி நேரங்களில் பள்ளிவாசலை தேடிச்செல்வதற்காகவும்தான் வகுப்பறையிலேயே பிரார்த்தனை செய்ய தலைமை ஆசிரியர் அனுமதித்திருக்கலாம் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்.. இது சம்பந்தமான வீடியோ வைரலாகிவரும் நிலையில், விசாரணையும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.