Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

நீர்நிலை ஆக்கிரமிப்பு: “சும்மா உட்காரவா ஊதியம்?” –

0

உட்காரவா ஊதியம்?” – அதிகாரிகளை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்

2015-ம் ஆண்டு முதலே நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் பற்றிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பலமுறை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நீர்நிலைகளின் எண்ணிக்கை, அவற்றிலுள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு மேல் உத்தரவு போட்டது நீதிமன்றம். அரசும் வாய்தா மேல் வாய்தா என்று வாங்கி வந்தது. இந்நிலையில், கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணையின்போது இன்னும் ஒரு வாரத்தில் இதுசம்பந்தமான அறிக்கையை அளிக்காவிடில் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும் என்று எச்சரிக்கை செய்தனர் நீதிபதிகள். இதன்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று (டிசம்பர் 8-ம் தேதி) அறிக்கை தாக்கல் செய்தார்.அதில், “நீர்நிலைகளைப் பாதுகாக்கவும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நீர்வள ஆதாரங்களைப் பெருக்கி வீட்டு உபயோகம், வேளாண்மை, தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கான நீர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு புறம்போக்கு நிலங்களில் வழிகாட்டி மதிப்பீடு பூஜ்ஜியம் என மாற்றப்பட்டுள்ளது. நீர்நிலைகளை பதிவுசெய்யக் கூடாது என பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி. உத்தரவு பிறப்பித்துள்ளார். நீர்நிலைகளில் உள்ள கட்டுமானங்களுக்கு மின்இணைப்பு மற்றும் திட்ட அனுமதி வழங்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. நீர்வள மேம்பாட்டுக்காகத் தனித்துறையே உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் இல்லாத நீர்நிலைகளை உருவாக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த ஜூலை மாதம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சிறு குட்டைகள் மற்றும் குளங்களை உள்ளூர் விவசாயிகள், இளைஞர்களின் உதவியுடன் மீட்டு எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நீர்நிலை ஆக்கிமிப்புகளை அகற்றவது மட்டுமன்றி, அவற்றை பழைய நிலைமைக்கு கொண்டு வர தூர்வாரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று 10-ம் வகுப்பு மாணவர் எழுதும் கட்டுரை போன்று வழக்கமான பாணியில் அறிக்கை வழங்கியுள்ளார்.

இதைப் படித்துப் பார்த்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், “இந்த அறிக்கை சம்பிரதாயத்துக்காகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று கண்டனம் தெரிவித்தனர்.இதையடுத்து நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது, “நீர்நிலைகள் எங்கெங்கு உள்ளன என்பது குறித்த விவரம் தெரிந்தால்தான், அதில் ஆக்கிரமிப்பு இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டறிய முடியும். அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் எந்த விவரமும் இல்லை. இந்த அறிக்கை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் தோல்வியைத்தான் காட்டுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் 57,688 ஆக்கிரமிப்புகள் உள்ளதாகக் கூறப்படும் நிலையில் 8,797 ஆக்கிரமிப்புகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அனுமதிக்கும் எந்த ஒரு அதிகாரியும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. கடமையை செய்யத் தவறிய அதிகாரிகள் மீது கருணை காட்ட முடியாது. அவர்கள் பின்விளைவுகளை சந்திக்க வேண்டும்.எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை நீர்நிலைகள் உள்ளன, அதன் சர்வே எண்கள் என்ன, அதன் பரப்பளவு என்ன என்பது குறித்தான விரிவான விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பு விஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரையும் மன்னிக்க முடியாது. அறையில் சும்மா உட்கார அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். முதலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஆஜராக உத்தரவிடுவோம்.

அதன்பிறகும் இதே நிலை தொடர்ந்தால் அவர்களின் ஊதியத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட நேரிடும். அதிகாரிகள் செய்யும் தவறுக்காக தமிழக அரசை குறைகூற முடியாது. தமிழகம் முழுவதும் பெய்த கனமழையால் ஏற்படும் வெள்ளப் பெருக்குக்கும், அதனால் ஏற்படுகின்ற பாதிப்புக்கும் அதிகாரிகள்தான் பொறுப்பு. ஏனென்றால், அவர்கள் நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை” என்று அரசு அதிகாரிகளை வெளுத்து வாங்கியுள்ளனர் நீதிபதிகள்.

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்