திருச்சி, மார்ச் 3-
கிராம கோவில் பூஜாரிகள் பேரவை, அருள்வாக்கு அருள்வோர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நிர்வாக அறங்காவலர் வேதாந்தம் தலைமையிலும், விஎச்பி மாநில தலைவர், தினமலர் வெளியீட்டாளர் ஆர்ஆர் கோபால்ஜி முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கிராம கோவில் பூஜாரிகள் பேரவையின் கோரிக்கையை ஏற்று ரூ.3 ஆயிரமாக இருந்த கிராம கோவில் பூஜாரிகளின் ஓய்வூதியத்தை ரூ.4 ஆயிரமாக உயர்த்தியும், ஒரு கால பூஜை திட்டத்தில் உள்ள சுமார் 14 ஆயிரம் கோவில் பூஜாரிகளுக்கு மாதம் ரூ ஆயிரம் வழங்கியும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது.
2021 சட்டசபை தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி எண் 406ல் கூறயிருப்பது போல், கிராம கோவில் பூஜாரிகளுக்கு மாத ஊதியம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறியது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. உடனடியாக எந்த வரையறையும் இல்லாமல் அனைத்து கிராம கோவில் பூஜாரிகளுக்கும் ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கவேண்டும்.
சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்களில் பணிபுரியும் ஊழியர்குளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் அவரது மறைவுக்கு பிறகு அவரது மனைவிக்கு வழங்கப்படுவது போல், ஓய்வூதியம் பெறும் கிராம கோவில் பூஜாரிகளின் மறைவுக்கு பிறக அச்சலுகை அவரது மனைவிக்கு வழங்கப்படவேண்டும். பூஜாரிகள் நலவாரியம் சீர்ப்படுத்த வேண்டும். புதிய நலவாரிய குழு ஏற்படுத்த வேண்டும். பூஜாரிகள் நல வாரியத்தில் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள இந்து கோவில்கள் மூலம் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி வருமானம் வந்தும், பல்லாயிரம் கிராம கோவில்களில் ஒரு விளக்கு எரிய கூட வசதி இல்லாத நிலை உள்ளது. எனவே அனைத்து கிராம கோவில்களுக்கும் கட்டணமில்லா மின்சாரம் வழங்கவேண்டும்.
கிராம கோவில் பூஜாரிகள் ஓய்வூதியம் பெற வருட வருமான உச்சவரம்பு இப்போது ரூ.72 ஆயிரமாக உள்ளது. இதை ரூ.1.20 லட்சமாக உயர்த்த வேண்டும். ஓய்வுபெற்ற அனைத்து கிராம கோவில் பூஜாரிகளுக்கும் மாத ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.