சிலர் அந்த வீடியோவைக் குறிப்பிட்டு, எளிய மக்களின் தலைவர் என்று கூறும் திருமாவளவன் மழை நீரில் கால் நனையாமல் இருக்க வேண்டும் என்று தொண்டர்களை தூக்கிச்செல்ல வைத்துள்ளார் என்று சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்தனர். மேலும், சிலர், விசிகவில் பலரும் திருமாவளவன் மீது ஒரு ரசிக மனநிலையில் இருக்கிறார்கள். திருமாவளவன் அதை ஊக்குவிக்கிறார் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேளச்சேரியில் வசித்து வருகிறார். நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அவர் டிப்டாப் உடை அணிந்து காலில் ஷூ அணிந்தபடி வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது முழங்கால் அளவுக்கு தரை தளம் பகுதியில் தண்ணீர் தேங்கி இருப்பதை பார்த்து திகைத்தார். இதையடுத்து, விசிக தொண்டர்கள் அவரை தங்களது தோளில் தூக்கி செல்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால், இதை திருமா ஏற்காமல் மறுத்துவிட்டார். பின்னர், அங்கே சில இரும்பு நாற்காலிகள் ஒன்றாக இணைத்து வைக்கப்பட்டிருந்ததைப் தொண்டர்கள் பார்த்தனர். காத்திருப்பவர்கள் அமர்வதற்காக இது போன்ற நாற்காலிகள் அங்கே இருந்தது. அந்த நாற்காலிகளை பயன்படுத்தி திருமாவளவன் மீது தண்ணீர் படாமல் அழைத்துவர தொண்டர்கள் முயற்சி செய்தனர்.
தொண்டர்கள் திருமாவளவனை இரும்பு நாற்கலிகள் மீது நிற்க வைத்து அந்த இரும்பு நாற்காலியை தள்ளிக் கொண்டே வந்தார்கள். பிறகு, கார் நிற்கும் இடம் வரை அந்த நாற்காலியில் திருமாவளவன் நின்றுகொண்டே வந்தார். பின்னர், திருமாவளவன் காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.