திருச்சி திருவெறும்பூரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. மணிகண்டன்….
திருவெறும்பூர் சார் பதிவாளர்கள் பாஸ்கரன், இந்துக்குமார், சபரிராஜன் என கடந்த ஒரு வருடத்தில் மூன்று சார் பதிவாளர்கள் லஞ்சம் வாங்கும் போது பிடிபட்டுள்ளனர்…
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பாப்பாகுறிச்சியை சேர்ந்த அசோக்குமார் என்பவருக்கு சொந்தமான நிலத்தை பத்திர பதிவு செய்ய சார் பதிவாளர் பாஸ்கரன் கடந்த 2022 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ம் தேதியன்று அசோக்குமார் என்பவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாயை
லஞ்சமாக பெற்ற போது கையும் களவுமாக பிடிபட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
அதன்பின் கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ம் தேதியன்று திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பல லட்சம் லஞ்ச பணம் கை மாறுவதாக கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான போலீஸ் சோதனையில் ஈடுபட்ட போது ஜன்னல் வழியே பணத்தை தூக்கிப் போட்டு ஊழியர்கள் எஸ்கேப் ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சோதனையில் கணக்கில் வராத 50 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டதால் அன்றைய தினம் பணியில் இருந்த பொறுப்பு சார் பதிவாளர் இந்துகுமார் உட்பட ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகின்ற இந்த சூழ்நிலையில் மீண்டும் நேற்று (01-03-2024) மாலை
திருச்சி கே.கே. நகர் பகுதியை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான காலி மனையை பத்திரப் பதிவு செய்வதற்காக திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகம் சென்று சார்பதிவாளர் சபரிராஜனிடம் அணுகி பத்திரப் பதிவு செய்வது தொடர்பாக கேட்டுள்ளார். அதற்கு திருவெறும்பூர் சார் பதிவாளர் சபரிராஜன் ஒரு பத்திரத்திற்கு பத்தாயிரம் வீதம் இரண்டு பத்திரத்திற்கு 20 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்து கொடுப்பதாக கூறியுள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கோபால கிருஷ்ணன் அவர்கள் லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி மற்றும் குழுவினருடன் நேற்று மாலை 5 மணியளவில் பத்திரப் பதிவு முடிந்தவுடன் கோபால கிருஷ்ணன் வசம் இருந்து சார்பதிவாளர் சபரிராஜன் தனிநபர் சூர்யா (வயது 24) என்பவரின் மூலம் லஞ்ச பணத்தை பெற்ற போது கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார்.
ஒவ்வொரு முறையும் லஞ்ச ஒழிப்புத் துறையால் பத்திரப் பதிவு ஊழியர் கைது செய்யப்பட்ட போது அந்த அலுவலகத்தில் பணியாற்றிய மற்ற அனைத்து ஊழியர்களும் கூண்டோடு மாற்றினாலும், இன்னும் லஞ்சம் வாங்குவது குறைந்தபாடில்லை என பொது மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்..
எது எப்படியோ, கடந்த ஒரு வருடத்தில் லஞ்சம் வாங்கிய மூன்று சார் பதிவாளர்களை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு நமது T நியூஸ் சார்பாக ஒரு ராயல் சல்யூட்..