திருச்சி, அரியமங்கலம் பகுதியில் மாவு ஆலையில் ரேசன் அரிசியை பதுக்கி மாவாக்கி விற்பனை செய்த 5 பேரை போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
திருச்சி அரியமங்கலம் சிவகாமி அம்மையார் தெருவில் உள்ள ஒரு மாவு ஆலையில், குடிமைப்பொருள் விநியோக திட்டங்களுக்கு பயன்படுத்தும் (ரேஷன்) அரிசியை கள்ளத்தனமாக பதுக்கி வைத்து, மாவாகவும் குருணையாகவும் அரைத்து விற்பனை செய்வதாக போலீஸôருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப்பிரிவு திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில், துணைக்கண்காணிப்பாளர் சுதர்சன் தலைமையில், ஆய்வாளர் கோபிநாத், உதவி ஆய்வாளர் கண்ணதாசன் உள்ளிட்ட போலீஸôர், குறிப்பிட்ட அந்த ஆலையில் ஞாயிற்றுக்கிழமை பகலில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், தலா 50 கிலோ எடை கொண்ட 7 மூட்டைகளில் 350 கிலோ அரிசி, 3மூட்டைகளில் 150 கிலோ குருணையும் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக சுலைமான் மகன் இஸ்மாயில், அப்துல் ரகுமான் மனைவி ரசூல் பிவி (மாவு மில்லின் உரிமையாளர்), அதே பகுதியைச் சேர்ந்த பூபதி, சதாம் உசேன்,அ.இஸ்மாயில் ஆகியோரை போலீஸôர் கைது செய்தனர். அரிசி மற்றும் மாவு மூட்டைகளுடன் அவற்றை விற்பனைக்கு கொண்டு செல்ல பயன் படுத்திய வேன் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Prev Post