திருச்சி விமாநிலையத்தில் கழிவறையில் கிடந்த ரூ 1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல், சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை.
திருச்சி மார்ச் 8:திருச்சி விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக மாறிய பிறகு தினமும் திருச்சி விமான நிலையத்தில், ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக இலங்கை, சார்ஜா,மலேசியா சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல நாடுகளுக்கு தினமும் விமான சேவை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவ்வப்போது விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு, தங்கத்தை கடத்தி வரும் சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று திருச்சி விமான நிலையத்தில் நேற்று மாலை பயணிகள் அறை அருகே உள்ள கழிவறையை துப்புரவு ஊழியர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது கழிவறையின் உள்ளே தங்கம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து துப்புரவு ஊழியர்கள் உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சுங்கத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கழிவறையில் கிடந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதில் 1 கிலோ 560 கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூபாய் 1 கோடி என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த தங்கத்தை கடத்தி வந்தது யார்? எங்கிருந்து கொண்டு வரப்பட்டது,யாரிடம் கொடுக்க இருந்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சுங்கத்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து முதல் கட்ட விசாரணையில் கழிவறை அருகே உள்ள சிசிடி கேமராவை ஆய்வு செய்தனர். அப்பொழுது அந்த வீடியோ பதிவில் ஒரு பயணி ஒருவர் கழிவறைக்குள் சென்று நீண்ட நேரம் கழித்து வெளியே வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பயணி தான் கடத்தி வந்த தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகளுக்கு பயந்து கழிவறையில் தங்கத்தை போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். மேலும் அந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியின் நேரத்தை வைத்து அந்த நேரத்தில் எந்த விமானம் வந்தது என்று சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்த போது ஸ்ரீலங்கா விமானம் என்று தெரியவந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று மாலை ஸ்ரீலங்கா விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளின் பட்டியலை வாங்கி அதில் வந்த இந்த பயணி யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.