காவல்துறை அதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் காவலர்களிடம் லஞ்சம் வாங்குவதை தடுக்க புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு, பொது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதோடு காவலரின் நலனிலும் கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறார். ஆரம்பம் முதலே இவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு காவலர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.காவலர்களின் பணி இடமாறுதல், தண்டனை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரம் தொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்ட பின்னரும், அந்த உத்தரவை சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு வழங்குவதில் சிலர் லஞ்சம் பெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதை தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு கையெழுத்து போட்ட அடுத்த நிமிடமே, அந்தத்தகவல் சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு தற்போது வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் இடையில் இருப்பவர்கள் லஞ்சம் பெறுவது தடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் கூறுகின்றனர்.காவல்துறையினருக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு இத்திட்டத்தை அண்மையில் நடைமுறைப்படுத்தினார்.காவல் துறையில் குறைதீர்ப்பு முகாம்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சரக காவல் துணைத்தலைவர், மண்டலகாவல்துறை தலைவர் என மூன்று நிலைகளில் நடத்தப்பட்டன. இதன் மூலம் 366 காவலர்களின் தண்டனை ரத்து செய்யப்பட்டது. 164 காவலர்களின் தண்டனை குறைக்கப்பட்டது. 51 காவலர்கள் பணிக்கு திரும்ப எடுக்கப்பட்டுள்ளனர். 1,353 காவலர்களுக்கு அவர்கள் விருப்பத்தின்படி சொந்தமாவட்டங்களுக்கு பணி இடமாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.காவல் துறையைச் சார்ந்தோர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக டிசம்பர் 22, 23ஆம் தேதிகளில் ‘காவல் குடும்ப வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, வேலூரில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம், தனியார் வங்கிகள், நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டன. இதில், 274 தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்றன. 1,046 பேர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
டிஜிபி சைலேந்திரபாபுவின் அதிரடி நடவடிக்கைகளுக்கு காவல்துறையைச் சேர்ந்தோர் ராயல் சல்யூட் அடிக்கின்றனர்