திருச்சி, மார்ச் 15:
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
“அமலாக்கத்துறை (ED) முதல் முறையாக அரசுத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்தியுள்ளது. அதன் முதல் கட்ட அறிக்கையில், டாஸ்மாக் மூலம் மூன்று வகையான ஊழல், முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. குவாட்டருக்கு பத்து ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டது, டெண்டர் முறைகேடு செய்யப்பட்டது, ஒப்பந்ததாரர்களுக்கு நூறு கோடி ரூபாய் ஆண்டுதோறும் வழங்கப்பட்டது. மேலும், பணியாளர் நியமனம், இடமாற்றத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது.
அமலாக்கத்துறை ஆய்வில், டாஸ்மாக் ஊழல் ஆயிரம் கோடி ரூபாயாக இருந்ததாகக் கூறினாலும், 2 லட்சம் கோடி ரூபாய்வரை ஊழல் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி சாராய ஊழல் நடந்தது போல, தற்போது தமிழ்நாட்டிலும் அதே நிலை உருவாகியுள்ளது. டெல்லியில் முதல்வர் தொடர்புடையதாக இருப்பது போல, தமிழக அரசியலுக்கும் தொடர்பு இருக்குமா என்பதில் சந்தேகம் உள்ளது. ஆதாரங்கள் உள்ளதால் அமலாக்கத்துறை இந்த வழக்கில் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த ஊழலை எதிர்த்து, நாளை மறுநாள் (மார்ச் 17) சென்னையில் பாஜக சார்பில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் கடைகள் முன்பு போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகம் இருப்பதாக கனிமொழி கூறினார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் கடைகளை மூடுவதாகக் கூறியவாறு நடந்ததில்லை. திமுக தலைமை இந்த ஊழலில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது.
திமுக அரசின் ஊழல் கோரமுகம் தற்போது வெளிச்சம் பெற்றுள்ளது. காவல்துறை அதிகாரம் தாண்டி செயல்படுகிறது. திருச்சி உக்கிரகாளியம்மன் கோவில் திருவிழாவிற்காக பேனர் வைத்ததற்காக பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், இது காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகம். திமுக தலைமைக்கு தெரியாமல் இந்த ஊழல் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த ஆட்சி மாற்றப்பட வேண்டியது அவசியம்.