திருப்பூர் மாவட்டம் இடுவாய் பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் கீதா. இவர் மாணவ மாணவிகளை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி வருவதாக புகார் எழுந்தது. மேலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாணவ மாணவிகளை ஏளனமாக நடத்துவதாகவும், கழிவறை சுத்தம் செய்யச்சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும் புகார் எழுந்தது. நானூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளியில் குறிப்பிட்ட மாணவர்களை மட்டும் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு கீதா செயல்படுவதாக பள்ளிக்கல்வித்துறைக்கு புகார் சென்றது. மாணவிகளின் புகாரையடுத்து திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அலுவலர் ரமேஷ், இடுவாய் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.
ரமேஷிடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் நடந்த நிகழ்வுகளை கூறியுள்ளனர். இதையடுத்து தலைமை ஆசிரியை கீதாவை அழைத்து மாணவிகள் முன்னிலையில் ரமேஷ் விசாரணை மேற்கொண்டார். மாணவிகளின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பது தெரியவந்தது. மேலும் கீதாவும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து கீதா கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் சரவணக்குமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மங்கலம் போலீசார் தலைமை ஆசிரியை கீதா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க கீதா சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து தலைமை ஆசிரியை கீதா நேற்று கைது செய்யப்பட்டார்.