தொட்டியம் அருகே உள்ள கொடியம்பாளையம் கூதன் செட்டியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமன் (வயது 50) இவர் கொடியம்பாளையம் ரேஷன் கடையில் மூட்டை தூக்கும் தினக்கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று மாலை வேலை முடிந்து ராமன் அங்குள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றார்.
பின்னர் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருக்கும் போது முகமூடி அணிந்த இரண்டு மர்ம நபர்கள் அவரது கழுத்தை அறுத்து விட்டு தப்பி சென்றனர்.
இதில் அவரது கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ரத்த வெள்ளத்தில் அவர் ஆற்றங்கரையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த அவரது மனைவி சம்பூர்ணம் கணவரை மீட்டு தொட்டியம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராமனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை முயற்சிக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. மயக்க நிலையில் இருப்பதால் மேற்கொண்டு புலன் விசாரணை நடத்த முடியவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆற்றில் குளிக்கும் போது தொழிலாளியை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Post