அன்னபூரணி அரசு அம்மா” என்கிற பேஸ்புக் அக்கவுண்ட்டில் வழியாக தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டு, பொதுமக்கள் பக்தி பரவசத்தில், பூஜை செய்யும் வீடியோக்களை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் திடீர் பெண் சாமியார் அன்னபூரணி.
சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனின் நெறியாளராக இருந்த நிகழ்ச்சியில், தன்னுடைய தனிப்பட்ட பிரச்சனைக்காக கலந்துகொண்டிருந்தார். அதன் பிறகு தற்போது அன்னபூரணி சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகியுள்ளார்.
இதுகுறித்து பிரபல தனியார் தொலைக்காட்சி இணையதளத்திற்கு பேட்டி கொடுத்துள்ள இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன். “அந்தப் பெண்ணின் வீடியோக்கள் நிறைய வந்திருக்குன்னு நினைக்கிறேன். அந்த வீடியோக்களையெல்லாம் பார்த்தபோது எனக்கு சிரிப்புதான் வருகிறது. அதேசமயம், மக்கள் ஏமாந்துப் போறாங்களேன்னு மனசு ரொம்ப கஷ்டமாவும் இருக்கு.அன்னபூரணியின் கடந்தகால தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றியோ, அவரின் நடத்தைக் குறித்தோ நான் எதையும் விவாதிக்க விரும்பவில்லை. அது அவரின் தனிப்பட்ட வாழ்க்கை. அதுகுறித்துப் பேசுவது சரி கிடையாது. ஆனால், இந்த மாதிரி சாமி என்று சொல்பவர்களின் காலில் மக்கள் விழுவது ரொம்ப ரொம்பத் தப்பான விஷயம். முட்டாள்தனமும்கூட.
சாமி என்று சொல்வதை மக்கள் நம்புவது பரிதாபமாக இருக்கிறது. எவ்வளவு நாட்கள் நாம் ஏமாற ரெடியாக இருக்கிறோமோ, அதுவரை நம்மை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள். இதில், எந்த சாதி, எந்த மதம் என்றெல்லாம் வேண்டாம். எல்லாவற்றிலும் இருக்கிறார்கள். அதனால், ‘நான் கடவுளின் அவதாரம்’ என்று சொல்லிக்கொண்டு வருபவர்களை மக்கள் நம்பக்கூடாது. சிந்தித்து கண் விழித்துக்கொள்ளவேண்டும். அதுதான் முக்கியமானது” என தெரிவித்துள்ளார்.