அடாவடி வசூல் செய்யும் மின்சாரத் துறை ஆய்வு அதிகாரி…..
திருச்சி-சென்னை புறவழிச்சாலை பகுதியை ஒட்டியே அமைந்துள்ள மின் வாரிய அலுவலகத்தில் வணிக நிறுவனங்களும், தொழிற்கூடங்கள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்களில் லிஃப்ட் அமைக்க மற்றும் *ஆய்வு* செய்யும் அதிகாரி குறித்த பல திடுக்கிடும் தகவல்களை பெயர் சொல்ல விரும்பாத ஒரு ஊழியர் நமக்கு தெரிவித்தார்…
அதாவது மதுரை பாண்டிக் கோவிலில் வீற்றிருக்கும் சாமியின் பெயரைக் கொண்ட மின்சாரத்துறை ஆய்வு அதிகாரி ஒருவர் வணிக நிறுவனங்களிடமும் மற்றும் தொழிற்சாலை உரிமையாளரிடமும் அடாவடியாக லஞ்சம் வசூல் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது..
பொதுவாக லிப்ட் தொடர்பாக ஆய்வு செய்ய வரும் அதிகாரிகளுக்கு கணிசமான தொகையை லஞ்சமாக கொடுத்து வந்த வேலையில் தற்போது வந்துள்ள அதிகாரி ஆய்வுக்கு வந்தால் அரை பவுன் தங்க காசு கொடுக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்து வருவதாகவும் அதுவும் 916 KDM நகை தான் வேண்டுமாம்…
மேலும் லிஃப்ட் அமைப்பதற்கான வரைபடத்தை ஆய்வு செய்து ஒப்புதல் தருவதற்கு ஒரு பவுன் தங்க காசு தர வேண்டும் என்று உரிமையாளர்களை நிர்பந்தம் செய்து வருகின்றார்..
வணிக நிறுவனங்கள் கடந்த காலங்களில் அதிகபட்சமாக ஐந்தாயிரம் கொடுத்து அனைத்து வேலைகளும் செய்து வந்த நிலையில் தற்போது வந்துள்ள சாமியின் பெயர் கொண்ட அந்த அதிகாரி எதற்கு எடுத்தாலும் குறைந்தது 1/2 பவுன் தங்க காசு முதல் ஐந்து பவுன் வரை தங்க காசுகளாக வாங்கி குவிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தை பூர்விகம் கொண்டு அந்த அதிகாரி வார நாட்களில் அலுவலகத்தில் உள்ளே உண்டியல் வைத்து வசூலாகும் தங்க நாணயங்களை வார இறுதியில் சொந்த ஊருக்கு செல்லும் போது எடுத்துச் செல்வதாக தகவல் தெரிவித்துள்ளனர்..
இதோடு மட்டுமல்லாது திருச்சியில் முறையாக அனுமதி பெறாமல் லிஃப்ட் அமைத்துள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு திடீர் ஆய்வு சென்று உரிமையாளர்களை மிரட்டி கணிசமான தங்கத்தை கறந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது..
இவரால் பாதிக்கப்பட்ட தொழிற்சாலை நிறுவனத்தைச் சேர்ந்த உரிமையாளர் ஒருவர் ஆதார ஆவணங்களுடன் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகாரை கொடுத்துள்ளதாகவும் *தங்க நாணய அதிகாரிக்கு எப்போ வேண்டுமானாலும் ஷாக் அடிக்கலாம்* என்ற பீதியை கிளப்பி விட்டு சென்றார்…