Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

வாரனாசி உரையில் மோடி!!!!!

0

வாரனாசி உரையில் மோடி ஏன் ராணி அகில்யபாய் ஹோல்க்ரையும், சீக்கிய மன்னன் ரஞ்சித் சிங்கையும் குறிப்பிட்டு சொன்னார் என்றால் விஷயம் இல்லாமல் இல்லை

வேத காலத்தில் இருந்து வழிவழியாய் இந்துக்களின் தலைநகராய் பொதுநகராய் இருந்தது காசி, பரந்துவிரிந்த பாரத கண்டத்தில் அது புண்ணியநதியான கங்கையின் ஓரத்தில் ஞானிகளாலும் ரிஷிகளாலும் அடையாளம் காணபட்ட புண்ணிய இடமாக இருந்தது

அதற்கான முதல் சவால் புத்த சமண காலத்தில் வந்தாலும் பின்னாளில் அவை முறியடிக்கபட்டன, நிஜமான ஆபத்து ஆப்கானியர் இங்கே ஆளவந்தபொழுது நடந்தது

இங்கே சில விஷயங்களை தென்னகத்தாரால் புரிந்து கொள்ள முடியாது, காரணம் ஆப்கானியர் ஆட்சியின் கருப்பு பக்கம் தமிழகம் போன்ற மாநிலங்களில் தெரியாது காரணம் நாயக்க இந்துமன்னர்கள் இங்கு வலுவாய் இருந்தார்கள்

ஆனால் வட இந்தியா அப்படி அல்ல அது 1300 முதல் 1650 வரை மிகபெரிய இக்கட்டில் இருந்தது இந்து அடையாளங்கள் இல்லாதபடி பலத்த மாற்றங்களும் அடையாள ஒழிப்பும் இருந்தன‌

காசிக்கு இதில் முதலிடம் இருந்தது

அதை மீட்க‌ கிளம்பியவன் வீரசிவாஜி அவனுக்கும் காசிக்கும் பொருத்தம் அதிகம், ஆனால் வெகு சாமான்ய குடும்பத்து சிவாஜி பிஜப்பூர் சுல்தானை அடக்கி கோல்கொண்டா சுல்தானை ஒடுங்கி அதன் பின் மொகலாயருடன் மோதி , அவனின் போராட்டமும் வீரமும் துணிச்சலும் அதிகம்

அவன் படாதபாடுபட்டு கோட்டைகளை பிடித்தும் முடிசூட்ட முடியா தடை இருந்தது, கடைசியில் அவுரங்கசீப்பிடம் இருந்து தப்பி காசியில் தலைமறைவாக திரிந்து மராட்டியம் திரும்பியபின்புதான் சத்ரபதி என முடிசூட்டினான், ஒரு அரசனாக அங்கீகரிக்கபட்டான்

ஆம், காசிக்கு சென்றுவந்த பின்பே அவனுக்கு முழு வெற்றி கிட்டிற்று

அவன் காசியினை மீட்க கடும் பிரயத்தனம் செய்தான் ஆனால் விதி அவனுக்கு இல்லை, 50 வயதிலே அவன் மரணமடைந்தான்

அவன் மகன் சாம்பாஜியினை அரவுரங்கசீப் வீசி எறிந்தான், காசியினை அவுரங்கசீப் பலமாக மாற்றினான், வேகமான அடையாள மாற்றங்கள் நடந்தன, சிவாஜியின் கனவு வீணாக போய்விடும் அச்சம் எழுந்தது

வரலாற்றில் அது ஒரு புரட்சி, அவுரங்கசீப்பால் சிவாஜி மகனை கொல்லமுடிந்ததே தவிர சிவாஜி ஏற்றிவைத்த இந்து எழுச்சியினை அடக்க முடியவில்லை, அலை அலையாய் எழுந்து மராட்டியர் அடித்த அடியில் மொகலாய வம்சம் அசைந்தது, அவுரங்கசீப்புக்கு பின் மெல்ல சரிந்தது

இக்காலகட்டத்தில்தான் அகல்பாய் ஹோல்கர் இந்தூர் ராணியாக முடிசூடினாள், அவள் ஹோல்கர் எனும் மராட்டிய வம்சத்தின் ராணி சிவாஜி ஏற்றிவைத்த எழுச்சியில் உதித்த இந்து ராணி

அவள் கனவர் காண்டே ராவ் ஹோல்கர் 1754ல் மொகலாயருடன் போரில் இறக்க ராணி முடிசூடினாள், அதுவும் சில ஆண்டு கழித்து 1767ல் முடிசூட்டினாள்

இக்காலம் நம் கட்டபொம்மனுக்கு முந்தைய காலம், தெற்கே ராபர்ட் கிளைவ் கால்வைத்த காலம்

அந்நேரம் ராணி மிக துணிச்சலாக நாட்டை நடத்தினாள், சுமார் 30 ஆண்டுகாலம் அவளின் சமஸ்தானம் அசைக்க முடியா பலத்துடன் இருந்தது

ராஜமாதா ஜீஜாபாயின் அவதாரமாக மக்கள் அவரை கொண்டாடினார்கள், அவள் நடத்திய வீரபோர்களால் காசி மராத்தியர் வசமாயிற்று

சுமார் 700 ஆண்டுக்கு பின் காசியில் இந்து ஆலயத்தை மீட்டவள் அவள்தான், அவுரங்கசீப் உருவாக்கிய அனைத்தயும் கலைத்து போட்டாள்

அவள் காலத்தில்தான் கங்கை படி கட்டபட்டது, ஆலயத்தின் பல விஷயங்கள் செய்யபட்டன‌

அவள் காசி மட்டுமல்ல மதுரா, சோமநாதபுரி என எங்கெல்லாமோ திருபணிகள் செய்தாள், சோமநாதபுரி ஆலயத்தில் முதல் விளக்கினை அவள்தான் ஏற்றி ஓரளவு துலங்க செய்தாள்

அந்த மகராணி சுத்தமான இந்து அரசி, அவளின் 30 ஆண்டுகால ஆட்சி காசியின் பொற்காலம். வீரசிவாஜி காசி பற்றி கண்டிருந்த கனவை எல்லாம் அவளே நிறைவேற்றி வைத்தாள்

அவளுக்கு வரலாற்றில் தனி இடம் உண்டு , வட இந்தியாவில் மிகபெரிய அடையாளம் அந்த அகல்யாய்பாய்

அவள் ஒரு வீரதுறவி சாயல், அப்படித்தான் அவள் கொண்டாடபடுகின்றாள் காசிபடிதுறையில் அவளுக்கு சிலை இன்றும் உண்டு

அவள் அந்த அளவு சில அடையாளங்களை மீட்டு காட்டியிராவிட்டால் இந்நேரம் ஆப்கானிஸ்தானின் காந்தாரம் போல அல்லது லாகூர் போல பல இந்து அடையாளம் காசியில் முழுக்க துடைக்கபட்டிருக்கும்

அடுத்து மோடி சொன்ன மன்னன் சீக்கிய மன்னன் ரஞ்சித் சிங்

உண்மையில் இந்திய வரலாற்றை மாற்றிபோட்டவன் இவனே, இந்த சீக்கிய மன்னனின் எழுச்சிதான் ஆப்கனுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒரு சீக்கிய சுவரை எழுப்பிற்று அதை தாண்டி படைவரமுடியா நிலையில்தான் மொகலாய வம்சம் அடிபட்டு போனது

கோஹினூர் வைரத்தை அவனே கையில் கட்டியிருந்தான், அவனேதான் மொகலாயர் ஆட்சிக்கு முழுக்க முடிவுரை எழுதினான்

அந்த சீக்கிய மன்னன் ரஞ்சித்சிங் காசியினை மீட்டெடுத்தான், சுமார் ஆயிரம் கிலோ தங்கத்தை கோவிலுக்கு அள்ளி கொடுத்தான், இந்துக்கள் மேல் அவனுக்கு அபிமானம் இருந்தது, அவனும் மறக்க முடியாதவன்

இதை எல்லாம் இன்று நினைத்து பார்த்து பல விஷயங்களை சொன்ன மோடி , அந்த காசி கரையில் உருவான சித்தன் மகாகவி பாரதியினையும் சொல்ல மறக்கவில்லை

இந்த ஒரு விஷயத்துக்காக, இந்த ஒரு வார்த்தைக்காக மோடி எனும் மாமனிதனை நாம் தமிழனாக அவர் இருக்கும் திசை நோக்கி தொழுகின்றோம்

ஆம், சுப்பிரமணி உண்மையான பாரதியாக உருவானது காசியில்தான் அந்த காசிமேல் அவனுக்கு எப்பொழுதும் பற்று இருந்தது

அந்த பாரதியின் வரிகளை மோடி சொன்னபொழுது உள்ளம் சிலிர்த்தது, இப்படி தமிழர் உணர்வறிந்த தமிழர்
வலியறிந்த தமிழர் அருமை அறிந்த ஒரு தலைவனுக்குத்தானே தமிழகம் காலமெல்லாம் ஏங்கிற்று எனும் நன்றி கண்ணீர் உற்று பார்த்தது

“காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்” என பாரதியின் வரிகளை காசியில் அவர் சொன்னபொழுது உலக இந்து தமிழருக்கெல்லாம் தனி பெருமிதம் ஏற்பட்டது

மோடி ஆலயம் மட்டும் திறந்து வைக்கவில்லை அவர் அந்த ஆலயத்தின் அடையாளங்களை காக்க பாடுபட்ட எல்லோர் வரலாற்றையும் சொன்னார்

ஆனால் ஒரே ஒரு பெயர் மட்டும் மிஸ்ஸிங், அது குமரகுருபரர்

காசியும் குமரகுருபரரும் பிரிக்கமுடியாதவர்கள், அந்த குமரகுருபரர் நெல்லை பிறப்பு ஆனால் பிறப்பால் ஊமை திருசெந்தூர் முருகன் அருளில் வாய்பேச தொடங்கியவர் மீனாட்சி அம்மையின் அருளால் கவிபுனையும் ஆற்றலும் அருளும் பெற்றார்

முழு யோகியானார், யோகத்தின் தவத்தில் காசியின் கொடுநிலை கண்டார்

அவர்தான் காசிக்கு சென்று அந்த ஆலயம் மீள வேண்டும் என கேட்டார், ஆனால் சுல்தான் அவை அவரை நோக்கி சிங்கத்தின் மேல் வந்து உருது பேசினால் யோசிக்கலாம் என பரிகாசம் செய்தது

மறுநாளே ஒரு சிங்கம் மேல் அமர்ந்து வந்து உருதில் அவர் வைத்தை கோரிக்கை கேட்டு அரண்ட சுல்தான் கோவிலை திரும்ப கொடுத்தான்

அன்னை மீனாட்சியே சிம்மமாக வந்ததாக ஐதீகம்

இது காசியின் வரலாற்றில் நடந்த அற்புதம், அந்த அற்புதத்தின் தொடர்ச்சியாகத்தான் இன்றும் தமிழக செட்டிகளே அங்கு சந்தணம் அரைக்கும் திருபணி செய்கின்றனர்

அந்த மகான் குமரகுருபர் இங்கு நிச்சயம் நினைவுகூற தக்கவர், அந்த தமிழக சித்தனை காசியில் மறக்கவே முடியாது அல்லது கூடாது

எமக்கு நம்பிக்கை உண்டு, குமரகுருபரருக்கும் காசி வளாகத்தின் ஓரத்தில் ஒரு இடம் ஒதுக்கபடும் நிச்சயம் மோடி அதை செய்வார் என நம்புகின்றோம்

இதை செய்தால்தான் காசிக்கும் தமிழகத்துகும் உள்ள பூர்வஜென்ம உறவும் தொடர்ச்சியும் அடையாளமாய் நிலைக்கும்

நாம் வரலாற்று காலத்தை மீள பார்க்கின்றோம், 100 வருடத்துக்கு முன்பு இதெல்லாம் நடக்கமுடியா கனவு, 1980களில் இதை தொட்டால் இந்தியா உடையும் என மிரட்டல்

ஆனால் அதையெல்லாம் தாண்டி ஒரு துளி சர்ச்சையின்றி, ஒரு பதற்றமோ பழியோ இல்லாமல் அதை சாதிக்கமுடிகின்றது என்றால் அம்மனிதன் இந்த திருப்பணிக்காக பிறந்தவன் அன்றி வேறு எதுவாக இருக்க முடியும்

காலபைரவர் காசியின் காவல் தெய்வம் என்பார்கள், அந்த காலபைரவர் பிறந்துவந்த வடிவம் மோடி என்ற சிலிர்பு கண்ணீருடன் உலக இந்துக்கள் அவரை வாழ்த்திகொண்டிருக்கின்றார்கள்

ஆம், மோடியால் “உலக இந்துக்களின் தலைநகர் காசி” மீட்கபட்டது மறுபடியும் வரலாறு குறித்து கொண்ட நாள் இன்று

இன்று கோடான கோடி இந்துக்கள் காசியினை மீட்கும் பொழுது எழும் அந்த “ஜெய் மகாதேவா” எனும் அந்த குரலை காசிக்காக முதலில் எழுப்பியவன் வீரசிவாஜி

இந்த கோஷத்தில் அந்த மாவீரனின் முகம் கண்முன் வராமல் போகாது, அவன் நினைவுடன் உரக்க சொல்லலாம், “ஜெய் மகாதேவா…”

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்