தமிழகத்தில் இருக்கும் 21 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 138 நகராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19ம் தேதியன்று தேர்தல் நடக்கவிருக்கிறது.
இதற்காக கடந்த 28 ஆம் தேதி முதல் வேட்பு மனுதாக்கல் தொடங்கியிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 22ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.
எனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக களமிறங்யிருக்கின்றனர். அந்த வகையில், கடலூர் மாநகராட்சியில் திமுக கூட்டணியில் வார்டு பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் அறிவிப்பு தாமதமாகி வருகிறது. அதாவது, திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் விசிக போன்றவற்றிற்கு தலா இரண்டு வார்டுகள் கொடுக்கப்படும் என்று பேச்சுவார்த்தை மூலமாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில், திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுகவிற்கு போட்டியிடுவதற்கு எந்த வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை எனவும் ஆதரவு மட்டும் கொடுக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மதிமுக நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மதிமுக நிர்வாகிகள், கடலூர் மாவட்டத்தில் தங்கள் கட்சிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு தொடர்பில் திமுக மாவட்ட செயலாளர்களுக்கு விளக்கமாக தெரிவித்து வருகிறார்கள். மேலும், இதனால் வைகோ கடும் கோபமடைந்திருப்பதாகவும் ஏற்கனவே கொரோனா பாதிப்பால் அவர் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், திமுக, இவ்வாறு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.