நகை பணத்திற்காக பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபரின் பெயர் பால்ராசு. 25 வயதாகும் இந்த இளைஞர் பெண்ணகோணம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் -பச்சையம்மாள் என்ற தம்பதியரின் மகனாவார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள கிழுமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகள் பூவழகியை பெண் பார்த்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் பால்ராசு.திருமணத்தின் போது வரதட்சணையாக 5 சவரன் நகையும் சீர்வரிசை பொருட்களையும் பூவழகியின் பெற்றோர் வழங்கினர். சில மாதங்கள் கழித்து 10 சவரன் நகையும் இரு சக்கர வாகனம் வாங்க ரூ.1 லட்சம் பணம் தருவதாகவும் உறுதி அளித்தனர். திருமணமான இரண்டே மாதங்களில் பால்ராசுவின் சுயரூபம் வெளிப்பட்டுள்ளது.
பூவழகியை திருமணம் செய்வதற்கு முன்பாகவே பல பெண்களை திருமணம் செய்து அவர்களுடன் போட்டோ எடுத்து வைத்திருந்தார் பால்ராசு. அந்த போட்டோக்களை பூவழகியிடம் காண்பித்து, இந்த பெண்களுடன் நான் குடும்பம் நடத்தி வருகிறேன் நீ கண்டு கொள்ளாதே என்று கூறினாராம். உன்னையும் நான் நன்றாக பார்த்துக்கொள்கிறேன் என்றும் கூறினாராம் பால்ராசு.பால்ராசு பற்றி தெரிந்தும் அவரோடு குடும்பம் நடத்தி வந்த பூவழகிக்கு அடுத்த இடி காத்திருந்தது. 10 சவரன் நகையும் ஒரு லட்சமும் கேட்டு சித்ரவதை செய்திருக்கிறான். பெற்றோர் வீட்டிற்கு சென்ற பூவழகியிடம் ரூ.50 ஆயிரம் கொடுத்து அனுப்பியுள்ளனர் பெற்றோர். அதை வாங்க சம்மதிக்காத பால்ராசு, மகளுடன் வாழ வேண்டுமானால் 3 லட்சமும் 10 சவரன் நகையும் வேண்டும் என்று கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. இதனையடுத்தே தன்னை ஏமாற்றி திருமணம் செய்து விட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார் பூவழகி.சிவகங்கை மாவட்டம் கோவிலூரைச் சேர்ந்த மைனர் பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்து விட்டு தலைமறைவானதாக பால்ராஜ் மீது காரைக்குடி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காரைக்குடி காவல்நிலைய காவலர்கள் தன்னிடம் விசாரித்து விட்டு சென்றதாகவும் காவல்நிலையத்தில் பூவழகி கூறினார்.பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த பிரதீபா என்ற பெண்ணையும் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் தற்போது 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். கெட் அப் மாற்றி பெயரையும் மாற்றி பல பெண்களை ஏமாற்றி வாழ்க்கையை சீரழித்ததாகவும் பணம் நகையோடு தலைமறைவாகி விட்டதாகவும் கூறியுள்ளார் என காவல்நிலையத்தில் அளித்த புகாரில் கூறியுள்ளார் பூவழகி.பூவழகி கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்துள்ள பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ஜெயசித்ராபோலீசார், மோசடி பால்ராசு மீது, 417, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, அவரை தேடி வந்தனர்.
தலைமறைவாக இருந்த பால்ராசுவை பூவழகியை வைத்தே பிடித்துள்ளனர். உன்னோடு வாழ ஆசைப்படுகிறேன் என்று பேச வைத்து ஆள் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டனர்.வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட பால்ராசு பூவழகியை சென்னையில் இருந்து விழுப்புரம், அங்கிருந்து காஞ்சிபுரம் தொடர்ந்து செங்கல்பட்டு என மாறி மாறி பயணம் செய்ய சொல்லி கூறியுள்ளார். அதை கேட்டு செங்கல்பட்டுக்கு சென்றார் பூவழகி. பால்ராசுவை பிடிக்க அனைத்துமகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசித்ரா தலைமையிலான 4 பேர் கொண்ட போலீசாருடன் தனித்தனி வாகனங்களில் செங்கல்பட்டுக்கு சென்றனர்.
மேம்பாலத்தில் நின்று கொண்டிருந்த பால்ராசுவிடம் அட்ரஸ் கேட்ட போலீசார் அவனை பிடித்துள்ளனர். அப்போது தப்பி ஓடவே, பொதுமக்களின் உதவியோடு மடக்கிப் பிடித்தனர். இதனால் செங்கல்பட்டு மேம்பால பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.செங்கல்பட்டுவில் பிரதீபா என்ற பெண்ணுடன் தங்கியிருந்தார் பால்ராசு. அந்த பெண் தற்போது கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. கைது செய்வதற்கு முன்புவரை தன்னுடன்தான் பால்ராசு தங்கியிருந்தார் என்று போலீசில் கூறியுள்ளார் பிரதீபா. பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வழக்கில் பால்ராசுவை கைது செய்த அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினர், பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் அனுமதித்து சிறையில் அடைத்தனர். கல்யாண மன்னன் தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.