சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தில் டிசம்பர் 5-ம் தேதி மரியாதை செலுத்த செல்லும் சசிகலா, டெல்லி திரும்பிப் பார்க்கும் வகையில் ஆதரவாளர்கள் கூட்டம் அலைமோத வேண்டும் என விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
நிர்வாகிகளிடம் போன் உரையாடல், சுற்றுப்பயணம் என எந்த அஸ்திரமும் பெரிதாக தமக்கு அதிமுகவை கைப்பற்ற கைகொடுக்காததால் தமது பலத்தை நிரூபிப்பது ஒன்றே இதற்கு வழி என அவர் கருதுவதாக கூறுகிறார்கள் உள் விவரமறிந்தவர்கள்.தினகரனும், சசிகலாவும் டிசம்பர் 5-ம் தேதி தனித்தனியாக ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தவிருப்பது கவனிக்கத்தக்கது.
மறைந்த ஜெயலலிதாவின் நினைவு நாள் வரும் டிசம்பர் 5-ம் தேதி வருகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகால சிறைவாசத்துக்கு பிறகு முதல்முறையாக ஜெயலலிதா நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் சசிகலா. இதனால் மெரினாவில் ஆதரவாளர்கள் கடல் போல் திரள வேண்டும் என விரும்பும் அவர், இதன் மூலம் டெல்லியின் கவனத்தை ஈர்க்கவும் திட்டமிட்டுள்ளாராம். குமரியில் தொடங்கி கும்மிடிப்பூண்டி வரை உள்ள சசிகலா ஆதரவாளர்களும், அமமுக நிர்வாகிகளும் டிசம்பர் 5-ம் தேதி சென்னையில் இதற்காக குவிய இருக்கிறார்கள்.