குமரி மாவட்டம் மருதங்கோடு அருகேயுள்ள நெடுவிளையைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் , நெடுவிளையில் தங்கராஜ் என்பவருக்கு சர்ச் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் பிறப்பித்த உத்தரவு: இந்து மதத்தின் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்று சகிப்புத்தன்மை. இந்த சகிப்புத்தன்மை சொந்த சாதி அல்லது மதம், பிற மாதங்களிலும் இருக்க வேண்டும். குமரி ஆட்சியர் பல்வேறு கோணங்களில் விசாரித்து சர்ச் கட்ட அனுமதி வழங்கியுள்ளார். ஆனால், அந்த இடம் குடியிருப்பு பகுதிக்குள் இருப்பதாக மனுதாரர் புகார் அளித்துள்ளார்.அதே பகுதியில் கோயிலும் உள்ளது. மனுதாரர் சுற்றியுள்ள மக்கள் மத்தியில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்தியாவின் பெருமை வேற்றுமையில் ஒற்றுமைதான். ஒற்றுமையில் வேற்றுமை அல்ல. மனுதாரர் தன்னை சுற்றி வாழும் பல்வேறு மதம், சாதியை சேர்ந்தவர்களின் நம்பிக்கைகள், அவர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை புரிந்துகொள்ள வேண்டும்.
குமரி ஆட்சியர் அல்லது பத்மநாபபுரம் சார்பு ஆட்சியர் ஆகியோர் சர்ச் கட்ட அனுமதி பெற்றுள்ள தங்கராஜை அழைத்து, ஒலிபெருக்கி வைத்து பிரார்த்தனை நடத்தினால் தான் கடவுளுக்கு கேட்கும் என்பதில்லை என புரியவைக்க வேண்டும். பிரார்த்தனை யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு இருக்க வேண்டும் என அவரிடம் கூற வேண்டும். இந்த மனு முடிக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்